பிரதமர் மோடியுடன் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் திடீர் சந்திப்பு!
மக்களவைத் தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகவுள்ள நிலையில், பிரதமர் மோடியை பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் இன்று திடீரென சந்தித்து பேசியுள்ளார்.
நாடு முழுவதும் 18வது நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளது. வாக்குகள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்நிலையில் பிரதமர் மோடியை பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் திடீரென சந்தித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற இந்த சந்திப்பு குறித்து எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை.
தேர்தல் பிந்தைய கருத்துகணிப்பு முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த சந்திப்பு நடந்துள்ளது. பாஜக கூட்டணியில் உள்ள முக்கிய கட்சிகளில் ஒன்று ஐக்கிய ஜனதா தளம். மத்திய அமைச்சரவையில் ஐக்கிய ஜனதா தளம் பங்கேற்பது குறித்து பாஜக மூத்த தலைவர்களுடன் ஆலோசிப்பதற்காக நிதிஷ்குமார் டெல்லி சென்றிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதற்கிடையே, மத்திய நிதிக் குழு பிரதிநிதிகள் பீகாருக்கு ஜூன் 10-ஆம் தேதி வர இருக்கின்றனர்.
பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து, சிறப்பு நிதி ஒதுக்கீடு ஆகியவை அந்த மாநில அரசின் முக்கியக் கோரிக்கைகளாக உள்ளன. இது தொடர்பாகவும் நிதீஷ் குமார் சில கோரிக்கைகளை மத்திய அரசிடம் முன்வைப்பார் என்று தெரிகிறது. மேலும், பீகாருக்கு மத்திய அரசு ஏற்கெனவே வழங்கி வரும் நிதியை அதிகரிப்பது குறித்தும் ஆலோசனை நடைபெறும் என்று தெரிகிறது.