டெல்லி அரசு Vs ஆளுநர் மீண்டும் மோதல்: மகளிர் ஆணையத்தின் 223 ஊழியர்கள் நீக்கம்!
டெல்லி மகளிர் ஆணையத்தின் 223 ஊழியர்களை துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
விதிமுறையை மீறி துணைநிலை ஆளுநரின் ஒப்புதலை பெறாமல் டெல்லி மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவர் சுவாதி மாலிவாலால் நியமனம் செய்யப்பட்ட ஒப்பந்த பணியாளர்களை உடனடியாக நீக்கம் செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், டெல்லி ஆம் ஆத்மி அரசுக்கும், துணைநிலை ஆளுநருக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : “கோவிட் தடுப்பூசி சான்றிதழ்களில் மோடியின் படம் திடீரென நீக்கம்” – சுகாதார அமைச்சக அதிகாரிகள் விளக்கம்!
கடந்த 2016 ஆம் ஆண்டு டெல்லி மகளிர் ஆணையத்தில் 223 பணிகள் புதிதாக உருவாக்கப்பட்ட ஒப்பந்த முறையில் ஊழியர்களை அப்போதைய தலைவர் சுவாதி மாலிவால் நியமனம் செய்திருந்தார். இதனைத் தொடர்ந்து, சுவாதி மாலிவாலால் நியமனம் செய்யப்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் அனைவரும் ஆம் ஆத்மி கட்சியுடன் தொடர்பு உடையவர்கள் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இதுகுறித்து டெல்லி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்த நிலையில், விசாரணையை நிறுத்தி வைக்க டெல்லி உயர்நீதிமன்றம் இந்த ஆண்டு உத்தரவிட்டது. இதற்கிடையே டெல்லி மகளிர் ஆணைய தலைவர் பதவியை ராஜிநாமா செய்த சுவாதி, ஆம் ஆத்மி கட்சி சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக ஜனவரி மாதம் பொறுப்பேற்றார்.