பெஹல்காம் தாக்குதல் : உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!
ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காமில் உள்ள சுற்றுலாத் தளம் ஒன்றில் நேற்று தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், 2 வெளிநாட்டவர் உட்பட 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இது 2019ஆம் நடந்த புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு காஷ்மீரில் நடந்த மிக மோசமான தாக்குதலாகும்.
பாகிஸ்தானை தளமாகக் கொண்ட தடைசெய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா (LeT) பயங்கரவாதக் குழுவின் நிழல் குழுவான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட், இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது. ஆனால் அதை அரசு இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
தீவிரவாதிகளின் இந்த தாக்குதலுக்கு பிரதமர் மோடி உட்பட அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி உள்ளிட்ட உலக தலைவர்களும் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த 26 பேரின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதனை தொடர்ந்து காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இந்த நிலையில் ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா பெஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
"நேற்று பஹல்காமில் நடந்த இழிவான பயங்கரவாதத் தாக்குதலால் மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தோம். அப்பாவி பொதுமக்களுக்கு எதிரான இந்த காட்டுமிராண்டித்தனமான மற்றும் அர்த்தமற்ற மிருகத்தனமான செயலுக்கு எங்கள் சமூகத்தில் இடமில்லை. இதை நாங்கள் கடுமையாகக் கண்டிக்கிறோம். இழந்த விலைமதிப்பற்ற உயிர்களுக்கு நாங்கள் இரங்கல் தெரிவிக்கிறோம்.
அன்புக்குரியவர்களின் இழப்பிற்கு எந்த பணமும் ஒருபோதும் ஈடுசெய்ய முடியாது, ஆனால் ஆதரவு மற்றும் ஒற்றுமையின் அடையாளமாக, ஜம்மு-காஷ்மீர் அரசு இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம், பலத்த காயமடைந்தவர்களுக்கு 2 லட்சம் மற்றும் சிறிய காயங்களுக்கு 1 லட்சம் இழப்பீடு வழங்குவதாக அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களை அவர்களின் வீடுகளுக்குத் திரும்பக் கொண்டு செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
Deeply shocked and anguished by the despicable terrorist attack in Pahalgam yesterday. This barbaric and senseless act of brutality against innocent civilians has no place in our society. We condemn it in the strongest possible terms.
We mourn the precious lives lost.
No amount…
— Office of Chief Minister, J&K (@CM_JnK) April 23, 2025
காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ வசதிகள் வழங்கப்படுகின்றன. துயரமடைந்த குடும்பங்களுக்கு எங்கள் இதயங்கள் அஞ்சலி செலுத்துகின்றன. உங்கள் துயரத்தில் நாங்கள் பங்கேற்கிறோம், இந்த இருண்ட நேரத்தில் உங்களுடன் நிற்கிறோம். ஆனால் பயங்கரவாதம் எங்கள் உறுதியை ஒருபோதும் உடைக்காது, மேலும் இந்த காட்டுமிராண்டித்தனத்தின் பின்னணியில் உள்ளவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படும் வரை நாங்கள் ஓயமாட்டோம்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.