"அண்ணா சாலைக்கு தனி ஆளாக வரத்தயார்" - அண்ணாமலை சவால்!
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் வீட்டுமனை பட்டா வழங்கும் விழா சென்னையில் இன்று (பிப்.20) நடைபெற்றது. இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “அண்ணாமலை ஒருமையில் பேசியதில் பெரிதாக ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. இந்த பிரச்னையை திசைமாற்ற, மடைமாற்ற பார்க்கிறார்கள். கேட்கும் நிதியை பெற்றுத் தராமல் சவால் விடுகிறார்கள். ஏற்கனவே அறிவாலயத்தை முற்றுகையிடுவேன் என்று அண்ணாமலை சொன்னார். முடிந்தால் அண்ணா சாலை பக்கம் வர சொல்லுங்கள்" என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலளித்துள்ளார். இது தொடர்பாக சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை பேசியதாவது,
"அண்ணா சாலையில் எங்கு வர வேண்டுமென்று கூறுங்கள், அங்கு வருகிறேன். பாஜக தொண்டர்கள் யாரும் இல்லாமல் தனியாக வருகிறேன். திமுகவினர் அனைத்து படைகளையும் திரட்டி வரட்டும். என்னை தடுத்து நிறுத்தி பாருங்கள். கல்விக்கு கொடுக்க வேண்டிய அனைத்து நிதிகளையும் மத்திய அரசு ஒதுக்கி கொடுத்துள்ளது. தரமில்லாமல் பேசினால் தரமில்லாமல் தான் பதில் வரும். தமிழ்நாட்டில் செயல்படும் ஆங்கில வழி பள்ளிகளிலேயே தமிழ் இல்லை"
இவ்வாறு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.