“ஹலால் பொருள்களைத் தடை செய்யுங்கள்!” என பீகார் முதல்வருக்கு கடிதம் எழுதிய பாஜக எம்.பி!!
மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் பீகாரில் ஹலால் பொருள்களைத் தடை செய்யுமாறு அம்மாநில முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார் .
பா.ஜ.கவைச் சேர்ந்த அமைச்சர் கிரிராஜ், ஹலால் சான்றிதல் பெற்ற பொருள்களின் விற்பனை, வணிகத்தை இஸ்மாமியமாக்கும் முயற்சி எனக் கூறியுள்ளார். மேலும், தனது எக்ஸ் பக்கத்தில் முதல்வர் நிதிஷ் குமாருக்கு எழுதிய கடிதத்தைப் பகிர்ந்த அவர், உத்தரப் பிரதேசத்தின் முதல்வர் யோகி ஆதித்யானந்தை எடுத்துக்காட்டாகக்கொண்டு பீகாரிலும் ஹலால் பொருள்களைத் தடை செய்யுமாறு கூறியுள்ளார். மேலும் வீடியோ பதிவு ஒன்றில் தன் கருத்தை வெளிப்படுத்திய கிரிராஜ், ஹலால் சான்று அளிக்கப்பட்ட பொருள்களை விற்பனை செய்வது, இடைக்காலத்தில் இஸ்லாமியர் அல்லாத மக்களுக்கு விதிக்கப்பட்ட ஜிஸ்யா வரியைப் போன்றது எனக் கூறியுள்ளார். மேலும், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக்கட்சிகள் இதைப் பொறுத்துக்கொண்டதற்குக் காரணம் ஓட்டு வாங்குவதற்காக மட்டுமே எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்துமதக் கோட்பாடுகளை வைத்து பொருள்களை விற்பனை செய்வது போலத்தான், இஸ்லாமிய கோட்பாடுளின் பெயரில் இந்த ஹலால் சான்றிதழ் மூலம் பொருள்களை விற்பனை செய்வதும் எனக் கூறியுள்ளார். மேலும் இதனால் சனாதன தர்மம் தாக்கப்படுகிறது எனவும் இந்த விற்பனைகளால் அனைவரும் இஸ்லாமிய வாழ்க்கை முறைப்படி வாழ வழிவகை செய்யப்படுகிறது எனவும் கூறியுள்ளார்.
இதற்கு பதலளித்த முதலமைச்சரின் தலைமை செய்தித் தொடர்பாளர், பா.ஜ.க மாட்டுக்கறி மாதிரியான விஷயங்களில் பாசாங்கு செய்கிறது என்றார். பா.ஜ.க தன்னை சனாதன தர்மத்தின் மிகப்பெரும் பாதுகாவலன் போல பாவித்துக்கொள்கிறது. ஆனால் உத்தரபிரதேசம் மாதிரியான மாநிலங்களில் உள்ள பா.ஜ.க தலைவர்கள்தான் அதிக அளவில் மாட்டு இறைச்சியை ஏற்றுமதி செய்துகொண்டிருக்கிறார்கள் என பதிலடி கொடுத்துள்ளார்.