Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்து மோடி பிரதமரானால் ஆட்சி நடத்துவது டெல்லியா அல்லது நாக்பூரா என்று சந்தேகம் வந்துவிடும்!” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

10:02 PM Apr 06, 2024 IST | Web Editor
Advertisement

பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்து மோடி பிரதமரானால் ஆட்சி நடத்துவது டெல்லியா அல்லது நாக்பூரா என்று சந்தேகம் வந்துவிடும்! என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். 

Advertisement

சிதம்பரத்தில் இன்று நடைபெற்ற இந்தியா கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் சிதம்பரம் தொகுதி வேட்பாளரும், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவருமான திருமாவளவன் மற்றும் மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வழக்கறிஞர் சுதா ஆகியோருக்கு வாக்கு சேகரித்து உரையாற்றினார் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்.

 ஸ்டாலின் பேசுகையில், "இந்தத் தேர்தலில், நீங்கள் போடும் ஓட்டு, திருமாவளவன் சொன்னதைப் போல, எம்.பி.களுக்கு மட்டுமல்ல, நாட்டு மக்கள் மேல் அன்பும் தமிழ்நாட்டு மேல் உண்மையான அக்கறையும் கொண்ட ஒருவர் பிரதமராக வர நீங்கள் வாக்களிக்க வேண்டும்! சமூகநீதியைக் காக்கும் ஒரு பிரதமர் டெல்லியில் அமர வாக்களிக்க வேண்டும்! சமூக நல்லிணக்கம், மதச்சார்பின்மை, ஏன்? அரசியல் சட்டத்தைப் பாதுகாக்கும் ஒரு பிரதமர் நாட்டை ஆள வாக்களிக்க வேண்டும்! ஏன் என்றால், இப்போது இருக்கும் பிரதமர் மோடிக்கு, சமூக நீதி மேல் அக்கறை இல்லை!

மதச்சார்பின்மையை மருந்துக்குக் கூட நினைப்பது இல்லை! சமத்துவத்திற்கும் அவருக்கும் சம்பந்தமே இல்லை! வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட இந்தியாவை அவருக்குப் பிடிக்கவில்லை! மொத்தத்தில் பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவை, 'பகையாளி இந்தியாவாக' மாற்ற நினைக்கும் ஒரு பிரதமர் நமக்குத் தேவையில்லை! இந்தத் தேர்தல் மூலமாக, இரண்டாம் விடுதலைப் போராட்ட வரலாற்றை எழுத நமக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்புதான் இந்தியா கூட்டணி! தமிழ்நாட்டில் வேரூன்றியுள்ள சமூகநீதி இந்தியா முழுவதும் பரவ உருவாகியுள்ள வாய்ப்புதான் இந்தியா கூட்டணி!

சமூகநீதி நமக்கு சாதாரணமாகக் கிடைத்துவிடவில்லை! ஏராளமான தியாகங்களால் விளைந்ததுதான் சமூகநீதி! மாபெரும் தலைவர்களெல்லாம் உழைத்து, நமக்கான உரிமையைப் பெற்றுக் கொடுத்திருக்கிறார்கள். பிட்டி தியாகராயர், டி.எம்.நாயர், டாக்டர்.நடேசனார், தந்தை பெரியார், இரட்டைமலை சீனிவாசன், அயோத்திதாச பண்டிதர், எம்.சி.ராஜா, புரட்சியாளர் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, கருணாநிதி, வி.பி.சிங் போன்ற தலைவர்களால் போற்றி வளர்க்கப்பட்டதுதான் சமூகநீதிக் கருத்தியல்! இந்தச் சமூக நீதிதான் ஒடுக்கப்பட்ட மக்களை இன்றைக்கும் உயர்த்திக் கொண்டு இருக்கிறது!

1921-ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தை ஆட்சி செய்த நீதிக்கட்சிதான், நம்முடைய மக்களுக்கு இடஒதுக்கீட்டை வழங்கியது. இந்த இடஒதுக்கீட்டிற்கு 1950-ஆம் ஆண்டு பேராபத்து வந்தது! தந்தை பெரியார் வெகுண்டெழுந்தார்! தமிழ்நாடே கொந்தளித்தது! பெருந்தலைவர் காமராசர் பிரதமர் நேருவிடம் வலியுறுத்தினார். புரட்சியாளர் அம்பேத்கர் அதற்கான சட்டத்திருத்தத்தை உருவாக்கிக் கொடுத்தார். இந்தத் தலைவர்களின் முயற்சியால்தான், "சமூக மற்றும் கல்வியில் பின்தங்கியுள்ள இதர பிற்படுத்தப்பட்ட - பட்டியலின - பழங்குடியின மக்களின் கல்வி, வேலைவாய்ப்பிற்காக மாநிலங்கள் செய்யும் எந்தச் சிறப்பு ஏற்பாடும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டதுதான்" என்ற அரசியல்சட்ட அங்கீகாரம் கிடைத்தது.

இப்போது தமிழ்நாட்டில் நாட்டிற்கே வழிகாட்டும் வகையில், 69 விழுக்காடு இடஒதுக்கீடு இருக்கிறது என்றால், அதற்குக் காரணம், திராவிட இயக்கம்! கருணாநிதி! இப்போது இரண்டு - மூன்று தலைமுறையாகத்தான், நம்முடைய வீட்டில் இருந்து, இன்ஜினியர்கள், டாக்டர்கள் வருகிறார்கள். அத்தி பூத்தது போன்று சில ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகள் வர முடிகிறது! இதெல்லாம் பாஜகவின் கண்களை உறுத்துகிறது! இந்த வேலைக்கு இவர்கள் எல்லாம், இட ஒதுக்கீட்டினால் வந்து விடுகிறார்களே என்று பாஜகவினர் நினைக்கிறார்கள்! "எரியுதுடி மாலா... ஃபேன போடு" என்று கதறுகிறார்கள்! இட ஒதுக்கீட்டை நம்மிடம் இருந்து தட்டிப் பறித்து, நம்முடைய குழந்தைகள் படித்து வேலைக்குச் செல்வதை கெடுக்க... என்னென்ன செய்ய முடியுமோ, அத்தனையும் செய்கிறார்கள்! இப்படிப்பட்ட பா.ஜ.கவுடன்தான் - பா.ம.க. கூட்டணி அமைத்திருக்கிறது!

திமுக சொல்வதை காங்கிரஸ் ஏற்கிறது: சில நாட்களுக்கு முன்பு வரை, விமர்சித்து பேசியவர்கள் இப்போது சேர்ந்திருக்கிறார்கள்! மனசாட்சி உள்ள பா.ம.கவின் தொண்டர்கள்கூட இதை ஜீரணிக்க முடியாமல் வேதனையுடன் தலைகுனிந்து நிற்கிறார்கள்! பா.ஜ.க, பா.ம.க கூட்டணி சந்தர்ப்பவாதக் கூட்டணி! ஆனால், நாங்கள் உருவாக்கி இருக்கும், இந்தியா கூட்டணி கொள்கைக் கூட்டணி.

இந்தியாவின் தென்கோடி முனையில் இருக்கும் தி.மு.க. சொல்வதை அகில இந்திய கட்சியான காங்கிரஸ் செய்கிறேன் என்று வாக்குறுதி கொடுக்கிறது! இதுதான் சமூகநீதிக் கூட்டணி! ஏன் என்றால், சமூகநீதி இந்தியாதான் இன்றைய உடனடித் தேவை! அதை அடைய, அமைதியான இந்தியா - வளர்ச்சியை நோக்கிய இந்தியா உருவாக - தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்! தனிநபர்களாக நீங்கள் வாக்களித்தால் மட்டும் போதாது! மக்களிடம் நீங்கள் சென்று பா.ஜ.க ஏன் தோற்கடிக்கப்பட வேண்டும் என்று எடுத்துச் சொல்ல வேண்டும்!" எனப் பேசினார் முதல்வர் ஸ்டாலின்.

Tags :
ChidambaramCongressDMKElection2024Elections with News7 tamilElections2024India AllainceLoksabha Elections 2024MayiladuthuraiMK Stalinnews7 tamilNews7 Tamil UpdatesparliamentSocial JusticeVCK
Advertisement
Next Article