"சமத்துவத்தையும் சமாதானத்தையும் விதைத்தவர் அய்யா வைகுண்டர்" - அண்ணாமலை புகழாரம்!
சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடியவர் அய்யா வைகுண்டர். அவர் வழியை பின்பற்றும் மக்கள் சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகள் ஒருங்கிணைந்த அவதாரமாக அய்யா வைகுண்டரை பார்ப்பதாக கூறப்படுகிறது. இவரின் பிறந்த நாள் அய்யா வைகுண்டர் அவதார தினமாக கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில், இந்த ஆண்டு அய்யா வைகுண்டரின் 193-வது அவதார தினம் இன்று (மார்ச் 4) கொண்டாடப்படுகிறது. அதன்படி நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும், கேரளாவிலும் அய்யா வைகுண்டரின் அவதார தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், அய்யா வைகுண்டரின் பிறந்தநாளை முன்னிட்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,
"ஒடுக்கப்படும் மக்களைக் காப்பதும், எளியவர்களுக்கு உதவிகள் செய்வதுமே தர்மம் என்று அன்பு நெறிகளை போதித்து, சாதி, மத வேறுபாடின்றி அனைவருக்கும் பொதுவானவராக இருக்கும் அய்யா வைகுண்டரின் 193 ஆவது அவதார தினத்தைக் கொண்டாடும் உலகளாவிய பக்தர்கள் அனைவருக்கும், பாஜக சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒடுக்கப்படும் மக்களைக் காப்பதும், எளியவர்களுக்கு உதவிகள் செய்வதுமே தர்மம் என்று அன்பு நெறிகளை போதித்து, ஜாதி, மத வேறுபாடின்றி அனைவருக்கும் பொதுவானவராக இருக்கும் அய்யா வைகுண்டர் அவர்களின் 193 ஆவது அவதார தினத்தைக் கொண்டாடும் உலகளாவிய பக்தர்கள் அனைவருக்கும், @BJP4Tamilnadu சார்பாக… pic.twitter.com/d8a9wTAqnn
— K.Annamalai (@annamalai_k) March 4, 2025
கடவுள் ஒவ்வொருவரிடமும் இருக்கிறார் என்ற ஞானத்தைப் போதித்து, சமூக ஏற்றத்தாழ்வுகளை விலக்கி, ஆண் பெண் அனைவரும் சமம் என, சமத்துவத்தையும் சமாதானத்தையும் விதைத்தவர். உடல் தூய்மையையும், உள்ளத் தூய்மையையும் வலியுறுத்தி, மக்களிடம் சமத்துவம், சமூகநீதி, சுயமரியாதை, அச்சமின்மை, தர்மம் போன்ற அறநெறிகளை வளர்த்தவர் அய்யா வைகுண்டர்.
அதிகாரத்துவம், சமூக ஏற்றத்தாழ்வு, கொலை, கொள்ளை, பெண்கள், குழந்தைகளுக்கெதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ள இன்றைய காலத்தில், அய்யா வைகுண்டரின் கருத்துக்களை முன்னெடுத்துச் செல்வது முக்கியமானதாக இருக்கிறது. அய்யா வைகுண்டரின் அவதார தினமான இன்று, அவரின் கருத்துகளைப் பின்பற்றி, அவர் காண விரும்பிய, ஏற்றத்தாழ்வற்ற, அமைதியான சமுதாயத்தை உருவாக்குவோம் என்று உறுதியேற்போம்"
இவ்வாறு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.