Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“தவறான விமர்சனங்களை தவிருங்கள்!” - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை!

10:24 PM Dec 23, 2023 IST | Web Editor
Advertisement

தவறான விமர்சனங்களை தவிர்க்குமாறு சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Advertisement

வானிலை முன்னறிவிப்பு எச்சரிக்கை தாமதமாக கிடைத்தது எனவும், வானிலை ஆய்வு மையம் கணித்ததை விட பல மடங்கு கூடுதலாக மழை பெய்ததாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியிருந்தார். இதனை தொடர்ந்து பல்வேறு தரப்பினர் வானிலை ஆய்வு மைய செயல்பாடு குறித்து விமர்சனங்களை முன்வைத்து வந்தனர்.

இந்நிலையில் சென்னை வானிலை மையம் நவீனமாக இல்லாமல் இருப்பதாக விமர்சனங்கள் ஊடகங்களில் வெளியாகி வருவதாகவும், அது போன்ற விமர்சனங்கள் தவறானவை என விளக்கமளித்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"சமீபமாக சென்னை வானிலை மையம் நவீனமாக இல்லாமல் இருப்பதாக தவறான விமர்சனங்கள் ஊடகங்களில் வெளியாகி வருகிறது. இந்திய வானிலை துறையில் பயன்பாட்டில் இருக்கும் அதிவேக கணினிகள், இஸ்ரோவின் செயற்கைகோள் வசதிகள், ரேடார்கள் மற்றும் தானியங்கி வானிலை சேகரிப்பன்கள் உலகத்தரத்திற்கு ஒப்பானவை. சென்னை மண்டல வானிலை மையத்திலும் இத்தகைய கருவிகளே பயன்பாட்டில் உள்ளன.

குறிப்பாக, சென்னை வானிலையை கண்காணிக்க இரண்டு டாப்ளர் ரேடார்களும், தென் தமிழகத்தை கண்காணிக்க மூன்று டாப்ளர் ரேடார்களும் பயன்பாட்டில் உள்ளன. இதில் X band வகை ரேடார் இஸ்ரோ தொழில் நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டு நிறுவப்பட்டதாகும். இந்தியாவில் சிறந்த ரேடார் தொழில்நுட்ப வல்லுநர்கள் சென்னை வானிலை மையத்தில் பணியாற்றுகிறார்கள்.

உலக வானிலை அமைப்பு இந்திய வானிலை ஆய்வு துறையின் கட்டமைப்பு மற்றும் முன்னெச்செரிக்கைகளை உலக தரம் வாய்ந்தது என்று பாராட்டியுள்ளது. வர்தா, கஜா, நிவர், மாண்டோஸ் மற்றும் மிக்ஜாம் புயல்கள் குறித்து வானிலை மையத்தின் எச்சரிக்கைகள் காரணமாக பெருமளவு உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

இந்நிலையில், ஆக்கப்பூர்வமான விமர்சனங்களுக்கு பதிலாக, சென்னை வானிலை மையத்தை இலக்காக வைத்து செய்யப்படும் விமர்சனங்கள், அர்ப்பணிப்புடன் இயங்கும் தமிழக வானிலை மைய பணியாளர்களை புண்படுத்தும் விதமாகவும், நமது இந்திய தொழில்நுட்பத்தை இழிவுபடுத்தும் விதமாகவும் உள்ளது. அத்தகைய தவறான விமர்சனங்களை தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது."

இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Tags :
#ChennaiMeteorologicalDepartmentAdvancedTechnologyChennaiRMCCriticismforecastIMDIndiaIndianMeteorologicalDepartmentMeteorologicalDepartmentNews7Tamilnews7TamilUpdatesRegionalMeteorologicalDepartmentrumorsSTATEMENTTechnologyWeatherForecast
Advertisement
Next Article