அவனியாபுரம் ஜல்லிக்கட்டு - யாரும் தொடமுடியாத காளை!
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடைபெற்று வரும் நிலையில், இரண்டாம் சுற்றில் களமிறங்கிய அஜீத்தின் காளையை அடக்கினால் ரூ.1 லட்சம் என்று அறிவித்த நிலையில், அஜீத்தின் காளை வெற்றி பெற்றது.
உலக புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று காலை தொடங்கியது. அமைச்சர் மூர்த்தி, திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா, மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மதுரை மாநகராட்சி ஆணையர் மதுபாலன் என பலர் பங்கேற்றனர். மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில், மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர்.
ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். முதல் சுற்றில் மஞ்சள் நிற உடையணிந்து வீரர்கள் களமிறங்கினர். அதனைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டி தொடர்ந்து நடந்து வருகிறது. சுற்றுக்கு 100 மாடுகளும், 50 வீரர்களும் களமிறங்கி வருகின்றனர். வாடிவாசலில் சீறி வரும் காளைகளை காளையர்கள் தீரத்துடன் அடக்கி வருகின்றனர். சில காளைகள் யாரும் தொட முடியாத வகையில் வாடிவாசலில் நின்று விளையாடும் காட்சி காண்போரை மெய் சிலிர்க்க வைக்கும் வகையில் உள்ளது.
இதனைத் தொடர்ந்து, முதல் சுற்று முடிவடைந்த நிலையில், முதல் சுற்றில் மூன்று காளைகளை அடக்கி தேனியை சேர்ந்த முத்து கிருஷ்ணன் முன்னிலையில் இருந்தார். தொடர்ந்து இரண்டாம் சுற்றில், பச்சை நிற உடையணிந்து வீரர்கள் களமிறங்கினர்.
இந்த இரண்டாம் சுற்றில், அவனியாபுரத்தை சேர்ந்த அஜித் என்பவர் தனது காளையை அடக்கினால் ஒரு லட்சம் தருவதாக கூறினார். இந்நிலையில், அஜீத்தின் காளை வெற்றி பெற்றது.