"என் பதிவை தவறாக புரிந்துகொண்டவர்கள் கவனத்திற்கு" - பஹல்காம் தாக்குதல் குறித்து விஜய் ஆண்டனி புதிய அறிக்கை!
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22-ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான டி.ஆர்.எப். பொறுப்பேற்றுள்ளதாக கூறப்படுகிறது. பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட இந்த பயங்கர தாக்குதல் இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. பதிலுக்கு பாகிஸ்தானும் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மாறி மாறி எடுக்கப்படும் இந்த நடவடிக்கைகள் காரணமாக எல்லைப் பகுதிகளில் பதற்றம் நிலவி வருகிறது.
இதையும் படியுங்கள் : கண்ணகி – முருகேசன் கொலை வழக்கு | குற்றவாளிகளின் தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்!
பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக, ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள், அவா்களின் ஆதரவாளா்களுக்கு எதிரான தேடுதல் வேட்டையை பாதுகாப்புப் படையினா் தீவிரப்படுத்தியுள்ளனா். பயங்கரவாதிகளுக்கு உதவியதாக நூற்றுக்கணக்கானோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பஹல்காம் போன்று இனியொரு தாக்குதல் நிகழாமல் தடுக்கும் நோக்கத்துடன் கடுமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே, இசையமைப்பாளர் விஜய் ஆண்டணி பஹல்காம் தாக்குதல் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர், “காஷ்மீரில் உயிரிழந்த சகோதரர்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன். அதே சமயத்தில் பாகிஸ்தானில் வசிக்கும் 50 லட்சம் இந்தியர்களையும், பாகிஸ்தான் பொது மக்களையும், நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அவர்களும், நம்மைப் போல அமைதியையும் மகிழ்ச்சியையும் மட்டுமே விரும்புகிறார்கள். வெறுப்பைக் கடந்து மனிதத்தை வளர்ப்போம்” என தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து, இசையமைப்பாளர் விஜய் ஆண்டணி பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவிப்பது போன்ற தகவல் பரவியது. இந்த நிலையில், அவர் புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
— vijayantony (@vijayantony) April 28, 2025
அதில் விஜய் ஆண்டணி கூறியிருப்பதாவது,
"என் பதிவை தவறாக புரிந்துகொண்டவர்கள் கவனத்திற்கு
காஷ்மீரில் நடந்த கொடிய படுகொலையை செய்த, அந்த மிருக வெறி கொண்ட பயங்கரவாத கூட்டத்தின் நோக்கம், நம் ஒற்றுமையை சிதைப்பதே ஆகும்.
இந்திய அரசும் நாமும், நம் வலிமையான கரங்களால் நம் இறையான்மையை பாதுகாப்போம்"
இவ்வாறு இசையமைப்பாளர் விஜய் ஆண்டணி தெரிவித்துள்ளார்.