டாஸ்மாக் விவகாரம் தொடர்பாக பேச முயற்சி - அதிமுக உறுப்பினர்கள் அவையிலிருந்து நீக்கம்!
சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று வழக்கம்போல காலை 9.30 மணிக்கு தொடங்கியது. வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் தொடங்கிய நிலையில், அமைச்சரின் பதிலுரையும் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இன்று சட்டப்பேரவைக்கு வருகை தந்த அதிமுக உறுப்பினர்கள் டாஸ்மாக் ஊழல் - பாட்டிலுக்கு 10 ரூபாய், விற்பனையில் ரூ.1,000 கோடி, உரிமம் பெறாத பார்கள் மூலம் ரூ.40,000 கோடி ஊழலா? என மக்கள் கேள்வி என்றும், 1,000 ரூபாய் கொடுப்பது போல கொடுத்து ரூ.1,000 கோடி எடுத்துக் கொண்டு அந்த தியாகி யார்?’ என்றும் கேள்வி எழுப்பும் விதமாக பேட்ஜ் அணிந்து வந்தனர்.
இந்த நிலையில், டாஸ்மாக்கில் ஊழல் நடைபெறுவதைக் குறிப்பிடும் வகையில் சட்டையில் 'அந்த தியாகி யார்' என எழுதப்பட்ட பேட்ஜ் அணிந்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவைக்குள் வருகை தந்தனர். இதேபோல அதிமுக சார்பில் தமிழக முழுவதும் போஸ்டர்கள் ஓட்டப்பட்டன.
நேரமில்லா நேரத்தில் கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேச எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி முயன்றார். இதற்கு பேரவை தலைவர் அனுமதியளிக்கவில்லை . கடந்த மாதம் டாஸ்மாக் அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் நடத்திய சோதனை குறித்து பேச முயன்றார்.
நீதிமன்றத்தில் இருக்கும் விசாரணை குறித்த விவகாரங்கள் குறித்தோ, அப்பொருள் குறித்த பெயரை கூட சொல்லக்கூடாது. விவாதிக்க கூடாது. அப்படி இருக்கையில் எப்படி நீங்கள் இதை பேச முடியும்? என அவை முன்னவர் துரைமுருகன் பேசினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் எ.வ.வேலு நீதிமன்றத்தின் இருக்கக்கூடிய விவகாரத்தினை இந்த அவையில் விவாதிப்பது உகந்ததல்ல என நீங்களே இந்த அவையில் தெரிவித்திருக்கிறீர்கள் என தெரிவித்தார்
இந்த நிலையில் அந்த தியாகி யார்? என்ற அட்டையை காண்பித்த அதிமுக உறுப்பினர்கள் அனைவரையும் ஒரு நாள் மட்டும் அவை நடவடிக்கைகளில் இருந்து நீக்கி சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். மேலும் அட்டை வைத்திருப்பவர்களை அவைக் காவலர்கள் அவையில் இருந்து வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார்.