4 மாநிலங்களில் தேடப்பட்டு வந்த ஏடிஎம் கொள்ளையர் தேனியில் கைது!
4 மாநிலங்களில் தேடப்பட்டு வந்த ஏடிஎம் கொள்ளையர் தேனி அருகே கைது செய்யப்பட்டுள்ளார்.
தேனி பழைய பேருந்து நிலையம் அருகில் ஜக்கமநாயக்கன்பட்டி ராமநாதன்
நகரை சேர்ந்தவர் தம்பிராஜ் (46). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரு
குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், இவருக்கு தொழில் எதுவும் இல்லாததால் வெளியூர்களுக்கு சென்று, அங்கு ஏடிஎம்களுக்கு பணம் எடுக்க வரும் விவரம் தெரியாத கிராமப்புற பெண்கள் மற்றும் முதியவர்களிடம் பணம் எடுத்து தருவதற்கு உதவுவது போல் நடித்து அவர்களது ஏடிஎம் கார்டை பயன்படுத்தி பணத்தை எடுத்துச் செல்லும் மோசடியில் ஈடுபட்டு வந்தார்.
இதன் மூலம் கிடைக்கும் பணத்தை போடிநாயக்கனூரில் உள்ள தனது மனைவிக்கு அனுப்பி வைத்து வந்துள்ளார். தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் சுமார் 22க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் இவர் மீது பதிவாகியுள்ளன. தமிழ்நாட்டில் தேனி, திண்டுக்கல், ராஜபாளையம், திருமங்கலம், செக்காணூரனி மற்றும் சென்னையில் சுமார் 15க்கும் மேற்பட்ட ஏடிஎம் மோசடி வழக்குகள் இவர் மீது பதிவாகியுள்ளன.
தமிழ்நாட்டில் மட்டுமின்றி ஆந்திராவில் 2 வழக்கு, கேரளாவில் 1 மற்றும் கர்நாடகாவில் 4 வழக்குகள் இவர் மீது பதிவாகியுள்ளன. நீண்ட காலமாக இவர் தேடப்பட்டு வந்த நிலையில், கடைசியாக இவர் தனது கைவரிசையை காட்டிய ஏடிஎம்மில் பதிவான புகைப்பட அடையாளத்தை வைத்து காவல்துறையினர் இவர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர்.
கோயம்புத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து இவரை தேடி வந்தனர். இவர் தனது குடும்பத்தினரை சந்திக்க போடிநாயக்கனூர் வந்த நிலையில் கோயம்புத்தூர் காவல்துறையினர் தம்பிராஜை கைது செய்து, விசாரணைக்காக கோயம்புத்தூருக்கு அழைத்துச் சென்றனர்.