#AssemblyElections – ஜம்மு-காஷ்மீரில் நாளை 2ம் கட்ட வாக்குப்பதிவு!
ஜம்மு-காஷ்மீரில் இரண்டாம் கட்டமாக நாளை 26 தொகுதிகளுக்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.
யூனியன் பிரதேசமான ஜம்மு-காஷ்மீரில் மொத்தமுள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு, 10 ஆண்டுகளுக்கு பின் 3 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி, முதல் கட்டமாக கடந்த 18ம் தேதி 24 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், 61.11% வாக்குகள் பதிவானது. இதையடுத்து, இரண்டாம் கட்டமாக 26 தொகுதிகளுக்கு நாளை (செப். 25) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இத்தொகுதிகளில் 239 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மேலும், இத்தொகுதிகளில் 25.78 லட்சம் பேர் வாக்காளிக்க தகுதிபெற்றுள்ளனர்.
இந்த தோ்தலுக்காக, 3,502 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. நாளை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு தேர்தல் நடைபெறவுள்ள தொகுதிகளில் நேற்றுடன் பிரச்சாரம் நிறைவடைந்தது. தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான உமா் அப்துல்லா கந்தா்பால் மற்றும் பத்காம் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இதனையடுத்து, மூன்றாம் கட்டமாக 40 தொகுதிகளுக்கு அக். 1ம் தேதி தேர்தல் நடத்தப்படவுள்ளது. அக். 8-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.