For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஆசாத் -இன் 50 ஆண்டுகால ஆட்சி முடிவு...“சிரியாவின் புதிய சகாப்தம் இன்று முதல் தொடக்கம்” - கிளர்ச்சியாளர்கள் அறிவிப்பு!

06:18 PM Dec 08, 2024 IST | Web Editor
ஆசாத்  இன் 50 ஆண்டுகால ஆட்சி முடிவு   “சிரியாவின் புதிய சகாப்தம் இன்று முதல் தொடக்கம்”   கிளர்ச்சியாளர்கள் அறிவிப்பு
Advertisement

சிரியா தலைநகர் டமாஸ்கஸின் புறநகர்ப் பகுதிகளை கிளர்ச்சிப் படையினர் இன்று கைப்பற்றிய நிலையில், கொடுங்கோல் ஆட்சி முடிவுக்கு வந்ததாக தெரிவித்துள்ளனர்.

Advertisement

மத்திய கிழக்கு நாடான சிரியாவில் 2011ஆம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் உள்நாட்டு போர் வெடித்தது. சிரியா அதிபர் பஷார் அல் ஆசாத் ஆட்சியை எதிர்த்து, யாத் தஹ்ரிர் அல் ஹாம் என்ற கிளர்ச்சி அமைப்பினர் கடந்த வாரம் முதல் ராணுவத்துடன் மீண்டும் சண்டையை தொடங்கினர். ஆசாத்தின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர சூளுரைத்துள்ள கிளர்ச்சியாளர்கள் இன்று காலை, சிரியா தலைநகர் டமாஸ்கஸ்-க்குள் நுழைந்ததை பகிரங்கமாக அறிவித்தனர்.

இதைத் தொடர்ந்து அரசு கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகள் முழுவதும் கிளர்ச்சியாளர்கள் குழுவின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. இதன் மூலம் ஆசாத் குடும்பத்தின் 50 ஆண்டுகால ஆட்சி சிரியாவில் முடிவுக்கு வந்தது. கிளர்ச்சியாளர்கள் குழு டமாஸ்கஸ்ஸில் நுழைந்ததை அடுத்து பஷார் அல் ஆசாத் நாட்டை விட்டு விமானத்தில் தப்பியோடி விட்டதாக தகவல்கள் வெளியாகின. எனினும், அவர் எங்கு சென்றுள்ளார் என்பது பற்றி எந்த தகவலும் இல்லை.

சிரிய அதிபராக இருந்த பஷார் அல் ஆசாத் தூக்கி எறியப்பட்ட நிலையில், அந்நாட்டின் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதனை சிரிய அரசு தொலைக்காட்சி மூலம், கிளர்ச்சியாளர் குழு வீடியோ வெளியிட்டு அறிக்கை ஒன்றை ஒளிபரப்பியது. இந்த அறிக்கையை படித்த நபர், டமாஸ்கஸ் ஆசாத்திடம் இருந்து விடுவிக்கப்பட்டதை நாங்கள் அறிவிக்கிறோம். உலகம் முழுக்க இடம்பெயர்ந்த மக்களே, சுதந்திர சிரியா உங்களுக்காக காத்திருக்கிறது, என்று தெரிவித்தார்.

கடந்த பத்து நாட்களுக்குள் சிரியாவில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை கண்ட கிளர்ச்சியாளர் குழு இன்று காலை தலைநகர் டமாஸ்கஸ்-ஐ கைப்பற்றிய நிலையில், சிரியா அதிபராக இருந்த பஷார் அல் ஆசாத் மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர் ஆகியோர் தலைமறைவாகியுள்ளனர். இதனை சிரிய பிரதமர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் உறுதிப்படுத்தி இருக்கிறார்.

சிரியாவை விட்டு அதிபர் பஷர் அல்-அசாத் தப்பிச் சென்றதையடுத்து, வெளிநாட்டில் உள்ள சிரியர்கள் "சுதந்திர சிரியா" க்கு திரும்ப வேண்டும் எனவும், டமாஸ்கஸ் “கொடுங்கோலரிடம்” இருந்து விடுவிக்கப்பட்டதாகவும் கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

“கொடுங்கோலன் பஷார் அல்-அசாத் தப்பி ஓடிவிட்டார்”, “டமாஸ்கஸ் நகரத்தை நாங்கள் சுதந்திரமாக அறிவிக்கிறோம்" என்று கிளர்ச்சிப் பிரிவுகள் டெலிகிராமில் தெரிவித்துள்ளன. 50 ஆண்டுகால அடக்குமுறை மற்றும் 13வருட கொடுங்கோன்மை இன்றுடன் முடிவுக்கு வந்தது. இந்த இருண்ட காலத்தின் முடிவு மற்றும் சிரியாவின் புதிய சகாப்தத்தின் தொடக்கத்தை இன்று அறிவிக்கிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளனர்.

Tags :
Advertisement