"திமுகவின் வலிமை குறைந்ததால் வீடு வீடாக சென்று உறுப்பினரை சேர்க்கின்றனர்" - கே.பி.முனுசாமி விமர்சனம்!
கிருஷ்ணகிரி மாவட்டம் கங்கலேரி கிராமத்தில் அதிமுக சார்பில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. மாவட்ட செயலாளர் கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினருமான அசோக் குமார் தலைமையில் நடைபெற்ற இந்த மருத்துவ முகாமை கிருஷ்ணகிரி வடக்கு மற்றும் மேற்கொண்டியைச் சேர்ந்த அப்பாதுரை, ராஜகோபால் ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.
இந்த நிகழ்ச்சியை அதிமுக துணை பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி கலந்து கொண்டு துவக்கி வைத்தார். இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு கண் பரிசோதனை, உடல் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர். மேலும் பலர் ரத்ததானம் வழங்கினர். இதனை தொடர்ந்து அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசியவர், "ஆயிரக்கணக்கான மா விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்து இருக்கிறார்கள்.
ஏக்கருக்கு 30,000 நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என நாங்கள் கோரிக்கை வைத்தோம். இதில் ஆட்சியாளர்கள் அரசியல் செய்வது வேதனையாக உள்ளது. வேளாண் ஊட்டச்சத்து திட்டம் என கூறுகிறார்கள் அது என்னவென்று புரியவில்லை. வேளாண் உற்பத்தி செய்யும் விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வாழ்வதா, சாவதா என்று தமிழகம் முழுவதும் பல போராட்டங்களை முன்னெடுத்து இருக்கிறார்கள். அந்தப் போராட்டங்களுக்கு செவிசாய்க்காமல் விவசாயிகளை ஏளனம் செய்வதுபோல் கருத்துக்களை கூறிக் கொண்டிருக்கிறார் முதல்வர். இதற்கு அரசையும், முதல்வரையும் வன்மையாக கண்டிக்கிறோம்.
2026 தேர்தலில் திமுக அரசுக்கு எதிராக விவசாயிகள் ஒன்றிணைந்து களம் காணும் சூழல் ஏற்படும் என விவசாய சங்க தலைவர் பி ஆர் பாண்டியன் தெரிவித்த கருத்துக்கு, பதில் அளித்த கே.பி.முனுசாமி அந்த சூழல் ஏற்பட்டு விட்டது. பி.ஆர்.பாண்டியன் சரியான கருத்தை தெரிவித்து இருக்கிறார். விவசாயிகள் எந்த அளவில் வேதனை பட்டு இருந்தால் இப்படி ஒரு கருத்தை தெரிவிப்பார்கள். அதற்கான பலனை 2026 தேர்தலில் தற்போதைய ஆட்சியாளர்கள் அனுபவிப்பார்கள் என பதில் அளித்தார். திமுகவின் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை குறித்து கருத்து தெரிவித்த கே.பி.முனுசாமி விருப்பப்பட்டு உறுப்பினர் படிவத்தை பெற்று அந்த கட்சி நிர்ணயித்துள்ள தொகையை செலுத்தி உறுப்பினராவர்கள்.
ஆனால் நீண்ட காலமாக இருக்கக்கூடிய இயக்கம் தொய்வடைந்த காரணத்தால் வீடு வீடாக சென்று கட்சியில் உறுப்பினரை சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த இயக்கத்தின் வலிமை குன்றிவிட்டது என்பதற்கான எடுத்துக்காட்டாக இதைப் பார்க்கிறேன். தொடர்ந்து காவல் நிலையத்தில் சந்தேகத்தின் பேரில் ஒருவரை அழைத்துச் செல்லும் பொழுது கேள்வி கேட்டு திருப்பி அனுப்பாமல் யாரோ ஒருவர் கூறுவதை கேட்டு விசாரணைக்கு அழைத்துச் செல்பவரை அடித்து துன்புறுத்துவதால் அவர் இறந்து போகிறார்.
சுமார் 50 இடங்களில் அடிபட்டுள்ளதாக மருத்துவமனை அறிக்கை கூறுகிறது, அப்படி என்றால் எத்தனை பேர் தாக்கி இருப்பார்கள், இதற்கு அரசு விளக்கம் அளிக்காமல் கடந்த கால நிகழ்வுகளை இணைத்து பேசக்கூடாது. தன்னைக் காப்பாற்ற யாரோ ஒரு அரசியல் தலைவர் இருக்கிறார் என்பதால் தான் காவல்துறைக்கு இது போன்ற துணிச்சல் வருகிறது. சட்டத்தை காவல்துறையே கையில் எடுத்துக் கொள்கிறது. தமிழகம் முழுவதும் இதே நிலைதான். முதல்வர் இதை கண்டுகொள்ளாமல் இருக்கிறார் இதே நிலை நீடித்தால் தனிமனிதனுக்கு பாதுகாப்பற்ற நிலை உருவாகும்.
தவறை சுட்டிக்காட்டும் பொழுது முதல்வர் அதற்கு பிராய்சித்தம் தேட முயல்வதில்லை மாறாக விமர்சனங்களுக்கு பதில் சொல்ல வேண்டியதில்லை என ஒதுங்கி செல்கிறார். பிரச்சனையை முன் நின்று தீர்க்க வேண்டிய முதல்வர் துணிவும், சக்தியும் இல்லாமல் ஒதுங்குகிறார். அதன் காரணமாகத்தான் இவ்வளவு பெரிய மரணங்கள் நிகழ்கிறது. சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி நான்காண்டுகள் முதல்வராக இருந்த பொழுது சட்டம் ஒழுங்கு பாதுகாப்பாக இருந்தது என தெரிவித்துள்ளார்.