அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக அமலாக்கத்துறை மனு - சற்று நேரத்தில் தீர்ப்பு...!
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறையால் தாக்கல் செய்யபட்ட மனு மீதான தீர்ப்பை டெல்லி நீதிமன்றம் சற்று நேரத்தில் அறிவிக்க உள்ளது.
டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கப்பட்டது. இந்த உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், 100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் எழுந்த புகார் மீதான விசாரணையில் கலால் துறை அமைச்சராக இருந்த மனீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படியுங்கள் ; “பெண்களை போல் ஆண்களுக்கும் இலவச பேருந்து வசதி” – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!
இந்த வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொள்ள அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அதில் விசாரணைக்கு ஆஜராகுமாறு தெரிவித்திருந்தது. ஆனால், சம்மனை வாங்க மறுத்த அரவிந்த் கெஜ்ரிவால், தனக்கு எதிராக சம்மன் அனுப்புவது சட்டவிரோதம் என தெரிவித்து சம்மனை திருப்பி அனுப்பினார்.
இதனைத் தொடர்ந்து மேலும் இரண்டு முறை அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது. ஆனால், மூன்றாவது முறையாகவும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை. இதனால் அமலாக்கத்துறை அதிகாரிகள் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் சோதனையில் ஈடுபடுவார்கள் எனவும், அவர் கைது செய்யப்படலாம் எனவும் ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.
இச்செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு பாதுகாப்பிற்காக அவர் வீட்டின் முன் போலீசார் பாதுகாப்பு போடப்பட்டது குறிப்பிடதக்கது. அதனைத் தொடர்ந்து, 5வது முறையாக பிப். 2-ம் தேதி ஆஜராகுமாறு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால், அனைத்து சம்மன்களையும் சட்டவிரோதமானது என கூறி, அரவிந்த் கெஜ்ரிவால் அதனை நிராகரித்துள்ளார்.
இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனுத்தாக்கல் செய்துள்ளது. டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜு பிப். 3 ஆம் தேதி மனுத்தாக்கல் செய்துள்ளார். இதையடுத்து, இந்த வழக்கு பிப்.7 ஆம் தேதி ஒத்திவைத்தது. அதன்படி, இந்த வழக்கு மாலை 4 மணி அளவில் உத்தரவுக்காக அனுப்ப உள்ளதாக கூடுதல் பெருநகர நீதிபதி மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.