அரவிந்த் கெஜ்ரிவால் கைது - டெல்லியில் பாதுகாப்பு தீவிரம்!
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கைதை கண்டித்து ஆம் ஆத்மி கட்சி போராட்டம் அறிவித்ததையடுத்து டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
டெல்லியில் மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதலமைச்சர் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலை, விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை 9 முறை சம்மன் அனுப்பியது. ஆனால், அமலாக்கத்துறையின் சம்மன் சட்ட விரோதமானது என்று கூறி அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராக மறுத்து வந்தார்.
இதற்கிடையில் 12 அதிகாரிகள் கொண்ட அமலாக்கத்துறை குழுவினர், நேற்று கெஜ்ரிவாலின் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர். இதையடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் கெஜ்ரிவாலை அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து கெஜ்ரிவால், இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
கெஜ்ரிவாலின் கைது நடவடிக்கையை எதிர்த்து பாஜக அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. இதனிடையே, டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்துக்குச் செல்லும் சாலைகளில் பல அடுக்கு தடுப்புகளை ஏற்படுத்தி போலீஸார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். பாஜக தலைமை அலுவலகம், அமலாக்கத் துறை அலுவலகம் உள்ள மத்திய டெல்லி சாலை மூடப்பட்டுள்ளன.
அதேபோல் டெல்லி ஐடிஓ மெட்ரோ ரயில் நிலையம் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை மூடப்படுவதாக மெட்ரோ ரயில்நிறுவனம் அறிவித்துள்ளது.