அரவிந்த் கெஜ்ரிவாலை வரவேற்று பட்டாசு வெடிப்பு - டெல்லி போலீசார் வழக்குப்பதிவு!
டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்துள்ள நிலையில், அரசு உத்தரவை மீறி அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டிற்கு வெளியே பட்டாசு வெடித்தது தொடர்பாக, சிவில் லைன்ஸ் காவல் நிலையத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, மதுபான கொள்கை வழக்கில் ஆறு மாதங்களுக்கு நேற்று (செப். 13) உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியது. கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கப்பட்ட உடனேயே அமைச்சர் அதிஷி, ஆம் ஆத்மி நிர்வாகிகள் அனைவரும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
தொடர்ந்து நேற்று மாலை 6.15 மணியளவில் கெஜ்ரிவால் திகார் சிறையில் இருந்து வெளியே வந்தார். திகார் சிறையில் இருந்து வெளியே வந்த கெஜ்ரிவாலுக்கு, ஆம் ஆத்மி தொண்டர்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் உற்சாக வரவேற்பளித்தனர். இல்லத்திற்கு சென்ற கெஜ்ரிவாலை பட்டாசு வெடித்தும், மலர் தூவியும் தொண்டர்கள் வரவேற்றனர்.
இந்நிலையில் கெஜ்ரிவால் வீட்டில் வெடி வெடித்தது தொடர்பாக அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்துள்ள நிலையில், மாசைக் கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குளிர்கால மாசைக் கட்டுப்படுத்த பட்டாசு உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாட்டுக்குத் தடை விதித்து கடந்த செப். 9-ம் தேதியன்று டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், அரசு உத்தரவை மீறி முதலமைச்சரின் வீட்டிற்கு வெளியே பட்டாசு வெடித்தது தொடர்பாக சிவில் லைன்ஸ் காவல் நிலையத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.