“அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கில் நியாயமான விசாரணை நடைபெற வேண்டும்!” - ஜெர்மனியை தொடர்ந்து அமெரிக்கா கருத்து!
மேலும் மார்ச் 28-ம் தேதி வரை அரவிந்த் கெஜ்ரிவாலை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு ரோஸ் அவென்யூ நீதிமன்றம் அனுமதி வழங்கியது. கெஜ்ரிவாலை 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை கோரிய நிலையில் 6 நாட்கள் மட்டுமே அனுமதி வழங்கி உத்தரவிட்டது.
கடந்த மார்ச் 22-ம் தேதி செய்தியாளர் சந்திப்பின்போது, கெஜ்ரிவால் கைது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த ஜெர்மன் துணைத்தூதரும், செய்தித் தொடர்பாளருமான ஜார்ஜ் என்ஸ்வெய்லர், “இந்தியா ஒரு ஜனநாயக நாடு. நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் அடிப்படை ஜனநாயகக் கொள்கைகள் தொடர்பான தரநிலைகளும் இந்த வழக்கில் பயன்படுத்தப்படும் என்று நாங்கள் கருதுகிறோம். குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் எவரையும் போலவே, கெஜ்ரிவாலுக்கும் நியாயமான மற்றும் பக்கச்சார்பற்ற விசாரணைக்கு உரிமை உண்டு. இதில் அவர் கட்டுப்பாடுகள் இல்லாமல் கிடைக்கக்கூடிய அனைத்து சட்ட வழிகளையும் பயன்படுத்த முடியும். குற்றமற்றவர் என்ற அனுமானம் சட்டத்தின் மையக் கூறாகும். அது அவருக்கும் பொருந்த வேண்டும்” என்றார்.
ஜெர்மனியின் இந்த கருத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. டெல்லியில் உள்ள ஜெர்மன் தூதரகத்தின் துணைத் தலைவர் ஜார்ஜ் என்ஸ்வீலர், மார்ச் 23-ம் தேதி வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு நேரில் அழைக்கப்பட்டு, இந்தியாவின் உள் விவகாரங்களில் அப்பட்டமான தலையீட்டுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை வெளியிட்ட கண்டனத்தில், “இதுபோன்ற கருத்துகள் இந்திய நீதித்துறை செயல்முறையில் தலையிடுவதாகவும், நீதித்துறையின் சுதந்திரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவும் நாங்கள் பார்க்கிறோம். பக்கச்சார்பான அனுமானங்கள் தேவையற்றவை" என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஜெர்மனிக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளரிடம் கேட்டபோது, "டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு நியாயமான, வெளிப்படையான மற்றும் சரியான நேரத்தில் சட்ட செயல்முறையை நாங்கள் ஊக்குவிக்கிறோம். இந்திய அரசாங்கத்துடனான ஜெர்மனியின் விவாதங்கள் குறித்து கருத்து தெரிவிக்க, ஜெர்மன் வெளியுறவு அமைச்சகத்தை அணுக ஊடகத்தை பரிந்துரைக்கிறோம்" என தெரிவித்துள்ளார்.
ஜெர்மனியை தொடர்ந்து அமெரிக்காவும் கெஜ்ரிவால் வழக்கில் நியாயமான விசாரணை நடைபெற வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் கருத்து குறித்து இந்திய அரசு தரப்பில் இதுவரை பதில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.