திகார் சிறையில் இருந்து வெளியே வந்தார் #ArvindKejriwal
திகார் சிறையில் இருந்து வெளியே வந்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
டெல்லி மதுபான கொள்கை முறைகேட்டில் ஈடுபட்டதாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது புகார் எழுந்தது. இந்த வழக்கில் அமலாக்கத்துறையால் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு, திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கு முன்னதாக ஆம் ஆத்மி கட்சியை சோ்ந்த மனிஷ் சிசோடியா, பிஆர்எஸ் தலைவா் கவிதா ஆகியோரும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
மதுபான முறைகேடு வழக்கில் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் நடந்து இருப்பதாக கூறி, சிபிஐ தரப்பிலும் அரவிந்த் கெஜ்ரிவால் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில் திகார் சிறையில் இருந்த அரவிந்த் கெஜ்ரிவாலை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனா். இதற்கிடையே அமலாக்கத்துறை வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி அமலாக்கத்துறை வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
இருப்பினும், சிபிஐ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதால் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருக்க வேண்டி இருந்தது. இதையடுத்து சிபிஐ வழக்கிலும் தனக்கு ஜாமீன் வழங்குமாறு உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அப்போது ஜாமின் வழங்க மறுப்பு தெரிவித்து அவரது ஜாமின் மனுவை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுமீதான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இன்று இறுதிகட்ட தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும் மத்திய அரசின் கூண்டு பறவைதான் சிபிஐ, என்ற மக்களின் பார்வையை சிபிஐ மாற்ற வேண்டும் என்றும், எந்த பாரபட்சமுமின்றி செயல்பட வேண்டும் என்றும் சிபிஐ-க்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர். கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கியதை, ஆம் ஆத்மி கட்சியினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். இந்நிலையில் கெஜ்ரிவால் இன்று மாலை 6.30 மணியளவில் திகார் சிறையிலிருந்து வெளியே வந்தார். வெளியே வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.