அரவிந்த் கெஜ்ரிவால் கைது எதிரொலி: மார்ச் 31-ல் டெல்லியில் மெகா பேரணி... இந்தியா கூட்டணி அறிவிப்பு...
மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து வரும் 31-ம் தேதி டெல்லியில் மெகா பேரணி நடத்த இருப்பதாக இந்தியா கூட்டணி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது..
டெல்லியில் மதுபான கொள்கையில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறி டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலை, விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை 9 முறை சம்மன் அனுப்பியது. ஆனால், அமலாக்கத்துறையின் சம்மன் சட்ட விரோதமானது என்று கூறி அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராக மறுத்து வந்தார்.
இதற்கிடையில் 12 அதிகாரிகள் கொண்ட அமலாக்கத்துறை குழுவினர், கடந்த மார்ச் 21-ம் தேதி கெஜ்ரிவாலின் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர். இதையடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் கெஜ்ரிவாலை கைது செய்தனர். தொடர்ந்து கெஜ்ரிவால், மார்ச் 22-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
மேலும் அவரை மார்ச் 28-ம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு ரோஸ் அவென்யூ நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அத்துடன் மார்ச் 28-ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு அவரை ஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. கெஜ்ரிவாலை 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை கோரிய நிலையில் 6 நாட்கள் மட்டுமே அனுமதி வழங்கி உத்தரவிட்டது.
இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து வரும் 31-ம் தேதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் மெகா பேரணி நடத்த இருப்பதாக இந்தியா கூட்டணி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக டெல்லியில் இன்று (மார்ச் 24) பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. ஆம் ஆத்மி கட்சியின் கோபால் ராய் கூறுகையில்,
“ஜனநாயகமும் நாடும் அபாயத்தில் உள்ளது. நாட்டின் நலனையும் ஜனநாயகத்தையும் காப்பாற்றுவதற்காக இந்தியா கூட்டணி இந்த மெகா பேரணியை நடத்த இருக்கிறது. சர்வாதிகாரமாக நாட்டில் ஜனநாயகத்தை முடிவுக்கு கொண்டு வந்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். அரசியலமைப்பையும் ஜனநாயகத்தையும் நேசிக்கும் அனைவரும் கோபத்தில் உள்ளனர். விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி பொய் வழக்குகள் மூலம் எதிர்க்கட்சித் தலைவர்களை ஒருவர் பின் ஒருவராக மோடி கைது செய்கிறார்" என்று குற்றம் சாட்டினார்.
இந்தச் சந்திப்பின் போது இந்தியா கூட்டணித் தலைவர்கள் தேர்தல் ஆணையத்தில் ஒரு மனுவினை வழங்கினர். அதில், எதிர்க்கட்சிகளைக் குறிவைத்து சமீபத்தில் நடந்த அனைத்து நிகழ்வுகளும் பட்டியலிடப்பட்டுள்ளன. மேலும் எதிர்க்கட்சிகளுக்கு சமமான வாய்ப்புகள் இல்லை என்றும், எதிர்க்கட்சிகளை அடக்க மோடி அரசு இடைவிடாமல் சட்டவிரோதமாக மத்திய விசாரணை அமைப்புகளை பயன்படுத்துவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.