ஷாங்காயில் அருணாச்சலைச் சேர்ந்த பெண் அலைக்கழிக்கப்பட்ட சம்பவம் - முதலமைச்சர் பெமா காண்டு கண்டனம்
அருணாச்சலப் பிரதேசத்தை சேர்ந்தவர் பெமா வாங்ஜோம் தாங்டாக் என்பவர் லண்டனில் இருந்து ஜப்பானுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். பயணத்தின் போது வழியில் சீனாவின் ஷாங்காய் விமான நிலையத்தில் இறங்கி மாற்று விமானத்தில் ஜப்பான் செல்ல திட்டமிடப்பட்டிருந்தார். அதன்படி கடந்த 21ம் தேதி ஷாங்காய் விமான நிலையத்தில் பெமா வாங்ஜோம் தாங்டாக் தரையிறங்கினார். ஆனால் அப்போது அங்கிருந்த சீன குடியுரிமை அதிகாரிகள் அருணாச்சலப் பிரதேசம் சீனாவில் இருக்கும் பகுதி எனவும் அதனால் பெமா வாங்ஜோமின் இந்திய பாஸ்போர்ட் செல்லாது எனவும் கூறி அவரை கைது செய்தனர்.
பெமா வாங்ஜோமை ஷாங்காய் விமான நிலையத்தில் சிறைவைத்த அதிகாரிகள் அவரின் பாஸ்போர்ட்டை முடக்கி, ஜப்பான் செல்வதையும் தடுத்து நிறுத்தினர். மேலும் சீன அதிகாரிகள் பெமா வாங்ஜோமை கேலி செய்தும், விமான நிலையத்தின் உணவு விடுதி உள்ளிட்ட வசதிகளை மறுத்தும் துன்புறுத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து பெமா வாங்ஜோம் ஷாங்காய் நகரில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்ட நிலையில் , இந்திய தூதரக அதிகாரிகள் தலையிட்டு அவரை ஜப்பானுக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே பெமா வாங்ஜோம் தேங்டாக், “அருணாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த இந்தியர்கள் வெளிநாடுகள் செல்லும்போது, அவர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும்" என கூறியுள்ளார்.
இந்த நிலையில் இச்சம்பவத்திற்கு அருணாச்சல பிரதேசத்தின் முதலமைச்சர் பெமா காண்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ”ஷாங்காய் விமான நிலையத்தில், அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த இந்தியக் குடிமகளான பெமா வாங்ஜோம் தோங்டாக்கை சீன குடியேற்ற அதிகாரிகள் நடத்திய விதம் எனக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செல்லுபடியாகும் இந்திய பாஸ்போர்ட் இருந்தபோதிலும், அவரை அவமானப்படுத்தியதும், இன ரீதியாக கேலி செய்வததும் மிகவும் கொடூரமானது. அருணாச்சலப் பிரதேசம் எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகவே இருக்கும்.
இத்தகைய நடத்தை சர்வதேச விதிமுறைகளை மீறுவதாகும். மேலும் நமது குடிமக்களின் கண்ணியத்திற்கு அவமானம் விளைவிப்பதாகும். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க இந்திய அரசின் வெளியுறவு அமைச்சகம் இந்த விஷயத்தை அவசரமாக எடுத்துக் கொள்ளும் என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.