”ரயில்வே பட்ஜெட்டில் பாஜக ஆளும் மாநிலங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படுகிறது” - மதுரை எம்.பி. சு.வெங்கடேசன்...!
டெல்லியில் மதுரை நடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
”டெல்லியில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மற்ற துறைகளைக் காட்டிலும் ரயில்வே துறையின் இந்த ஆலோசனை கூட்டம் மிக தாமதமாக நடைபெற்றது சுட்டிக்காட்டப்பட்டது. மிக முக்கியமாக பிற ரயில்வேத்துறையை காட்டிலும் தெற்கு ரயில்வேக்கு மிக குறைந்த அளவிலான நிதி மட்டுமே ஒதுக்கப்படுகிறது என்பதை சுட்டிக்காட்டினோம்.
2024- 25 Revised பட்ஜெட்டில் புதிய ரயில்வே துறைக்கு , 31,458 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதிலிருந்து தெற்கு ரயில்வேக்கு வெறும் 301 கோடி மட்டுமே புதிய ரயில் தடங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மொத்த பட்ஜெட்டில் வெறும் 1சதவீதம் மட்டுமே. இதன் மூலம் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படுவதும் தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலத்திற்கு பட்டை நாமம் அடிப்பது என்பதை காட்டுகிறது.
பிரதமர் சிறப்பு திட்டத்தின் மூலம் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கூட்டப்பட்ட கூட்டத்தில் மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் குஜராத் சத்தீஸ்கர் ஆகிய நான்கு மாநிலங்களில் 18 நகரங்களை இணைக்கும் வகையில் 24,638 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் பிகார் மாநிலத்திற்கு 2,192 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் நடப்பாண்டில் இது போன்ற எந்த ஒரு சிறப்பு திட்டமும் தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலத்திற்கு வழங்கப்படவில்லை.
பல ஆண்டுகளாக ஒப்புதல் கொடுக்கப்பட்டும் நிதி ஒதுக்கப்படாமல் உள்ள திண்டிவனம் செஞ்சி திருவண்ணாமலை, அத்திப்பட்டு - புத்தூர், ஈரோடு - பழனி, மதுரை அருப்புக்கோட்டை வழியாக தூத்துக்குடி , சென்னை மகாபலிபுரம் கடலூர் புதிய ரயில்வே வழித்தடங்களுக்கு ஒப்புதல் கொடுக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் இத்திட்டங்கள் கிடப்பில் உள்ளன. அதேபோல அகல ரயில் பாதை திட்டங்கள் உள்ளிட்ட திட்டங்களுக்கு ஒரு சதவீதம் வரை மட்டுமே நிதி வழங்கப்படுகிறது இதனுடைய முழு விவரங்கள் இன்றைய தினம் கூட்டத்தில் மத்திய ரயில்வே அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மதுரையில் இருந்து சென்னைக்கு கூடுதல் ரயில் இயக்க வேண்டும். கோயம்புத்தூரில் போத்தனூரிலும், மதுரையின் கூடல் நகரமும் இரண்டாவது ரயில்வே முனையமாக மாற்றப்பட வேண்டும்.
தூத்துக்குடி துறைமுகத்தை அடைய அனைத்து ரயில்களும் மதுரையை கடந்து செல்வதால் கடுமையான போக்குவரத்து நெருக்கடியும் உள்ளன. இதற்கு மாற்றாக மதுரையில் பைபாஸ் வழித்தடம் உருவாக்கப்பட வேண்டும்.
டிசம்பர் 1ம் தேதி தொடங்க உள்ள நாடாளுமன்ற கூட்ட தொடரில், எதிர்க்கட்சிகள் சார்பில் எழுப்ப வேண்டிய விஷயங்கள் தொடர்பாக இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசித்து முடிவெடுப்பார்கள். அதேபோல் ரயில்வே பட்ஜெட் வரும் பொழுது தமிழ்நாடு மற்றும் கேரளா நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய அரசு புறக்கணிக்கும் திட்டங்களை கட்டாயம் எழுப்ப தயாராக உள்ளோம்” என தெரிவித்தார்.