"நீதிமன்ற தீர்ப்புகளில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தக் கூடாது" - கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு
அனைத்துத் துறைகளிலும் இப்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கேரள உயர் நீதிமன்றமானது, செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவது தொடர்பாக கேரள மாவட்ட நீதிமன்றங்களுக்கு ஒரு சிறப்பு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, நீதிமன்ற தீர்ப்புகள் மற்றும் உத்தரவுகளைப் மொழிப்பெயர்க்க சாட்ஜிபிடி, டீப்சீக் போன்ற செய்யறிவு தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தக்கூடாது என்றும் மீறி பயன்படுதினால் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் உத்தரவிட்டுள்ளது. அதாவது, ஒரு வழக்கில் தீர்ப்பு முடிவுகளை ஆராயவோ அல்லது தீர்ப்பு உத்தரவுகளை தயார் செய்யவோ செயற்கை நுண்ணறிவு கருவிகளைப் பயன்படுத்த வேண்டாம், ஏனெனில் அதில் பிழைகள் ஏற்பட வாய்ப்புள்ளது, மேலும் தகவல்கள் வெளியே கசிய வாய்ப்புள்ளது என்றும் கூறியுள்ளது.
அதேநேரத்தில் "ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் முறையான பயிற்சி வேண்டும். நீதித்துறையால் அங்கீகரிக்கப்பட்ட ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தலாம். அதுவும் தீர்ப்புகளுக்கு பயன்படுத்தக் கூடாது. இதற்காக நீதித்துறை நடத்தும் பயிற்சிகளில் கலந்துகொண்டு அதுபற்றி தெரிந்துகொள்ளலாம். ஒருவேளை ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தினாலும் அவற்றை ஒருமுறை சரிபார்க்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட ஏஐ கருவிகளைப் பயன்படுத்தும்போது ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் உடனடியாக ஐடி துறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்" என்று கூறியுள்ளது.