கெஜ்ரிவால் கைதை கண்டித்து டெல்லியில் ஆம் ஆத்மி போராட்டம்! மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்: பல பகுதிகளில் 144 தடை உத்தரவு!
கெஜ்ரிவாலின் கைதை கண்டித்து டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், பல்வேறு பகுதிகளில் மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. பிரதமர் மோடியின் இல்லம் இருக்கும் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலின் கைதுக்கு பல முக்கிய தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பலர் ஆர்ப்பாட்டங்களிலும், போராட்டங்களிலும் ஈடுபட்டனர். ஆம் ஆத்மி தன் எதிர்ப்பை பல வழிகளில் தெரிவித்து வருகிறது. மேலும் இந்திய கூட்டணி ராம் லீலா மைதானத்தில் கண்டன பேரணியை ஏற்பாடு செய்துள்ளது. நேற்று ‘பிரதமர் மோடியின் மிகப்பெரிய பயம் கெஜ்ரிவால்’ என்ற தலைப்புடன் கெஜ்ரிவால் சிறை கம்பிகளுக்கு பின்னால் இருப்பது போன்ற புகைப்படத்தை தங்கள் முகப்பு பக்கங்களில் ஆம் ஆத்மி கட்சியினர் வைத்தனர்.
சமூக ஊடகங்களில் தங்கள் எதிர்ப்பை நீட்டிக்க, ஆம் ஆத்மி தலைவர்கள் DP பிரச்சாரத்தை தொடங்கினர். இந்நிலையில் இன்று டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்தை முற்றுகையிட்டு இன்று போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்தனர். இதையடுத்து அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிரதமரின் இல்லத்தை சுற்றி காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி டெல்லியின் பல்வேறு பகுதிகளில் ஆம் ஆத்மி தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி தொண்டர்களின் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டதால், பல்வேறு பகுதிகளில் மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
டெல்லியில் மதுபான கொள்கையில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறி டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலை, விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை 9 முறை சம்மன் அனுப்பியது. ஆனால், அமலாக்கத்துறையின் சம்மன் சட்ட விரோதமானது என்று கூறி அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராக மறுத்து வந்தார்.
இதற்கிடையில் 12 அதிகாரிகள் கொண்ட அமலாக்கத்துறை குழுவினர், கடந்த மார்ச் 21-ம் தேதி கெஜ்ரிவாலின் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர். இதையடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் கெஜ்ரிவாலை கைது செய்தனர். தொடர்ந்து கெஜ்ரிவால், மார்ச் 22-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.