த.வெ.க. மாநாட்டில் மருத்துவ வசதிகள் குறித்து தவெக மருத்துவரணி செயலாளர் பிரபு பேட்டி!
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டில் தொண்டர்களுக்குத் தேவையான மருத்துவ வசதிகள் குறித்து, த.வெ.க.வின் மருத்துவரணி செயலாளர் பிரபு, நியூஸ் 7 தமிழுக்கு அளித்த பேட்டியில் விளக்கமளித்தார்.
மாநாட்டில் தொண்டர்களின் நலன் கருதி இருபதுக்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முகாம்களில் மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட சுமார் 600 நபர்கள் சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மாநாட்டு அரங்கிற்கு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு, உடல்நலக் குறைவு ஏற்பட்டவர்களுக்குத் தேவையான அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உடல்நிலை மோசமாக உள்ள தொண்டர்கள், ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர்.
வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால், தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு உடல்நலக் குறைவு ஏற்படுகிறது. அவர்களுக்குத் தேவையான உடனடி சிகிச்சையை மாநாட்டு முகாமிலேயே அளித்து வருவதாகவும், தேவைப்படுபவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும் பிரபு தெரிவித்தார். இந்த ஏற்பாடுகள், மாநாட்டில் பங்கேற்றுள்ள தொண்டர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.