காவல் நிலையத்தில் ராணுவ அதிகாரியின் வருங்கால மனைவிக்கு பாலியல் வன்கொடுமை... 5 போலீசார் #Suspend!
ஒடிசாவின் பரத்பூர் காவல் நிலையத்தில் ராணுவ அதிகாரி ஒருவரைத் தாக்கி, அவரது வருங்கால மனைவியை போலீசார் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கத்தில் பணியமர்த்தப்பட்ட ராணுவ அதிகாரி ஒருவர் தனது வருங்கால மனைவியுடன், கடந்த 15-ம் தேதி ஒடிசாவின் பரத்பூர் காவல் நிலையத்திற்கு புகார் ஒன்றை அளிக்க சென்றுள்ளனர். இளைஞர்கள் சிலர் தங்கள்மீது தாக்குதல் நடத்தியதாக புகார் அளிக்க சென்றுள்ளனர். அப்போது காவல் நிலையத்தில் ஒரு பெண் கான்ஸ்டபிள் மட்டுமே இருந்துள்ளார். அப்போது எப்ஐஆர் பதிவு செய்வது தொடர்பாக, அவருடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
சிறிது நேரத்தில் அங்கு வந்த ஆண் காவலர்கள் தங்களை தாக்கியதாக, ராணுவ அதிகாரியை லாக்-அப்பில் அடைத்துள்ளனர். அப்போது ராணுவ அதிகாரியை காவலில் வைக்க முடியாது என அப்பெண் பேசியுள்ளார். உடனே அப்பெண்ணையும் தாக்கி, கைகளை கட்டி அறை ஒன்றில் அடைத்துள்ளனர். பின்னர் அங்கு வந்த ஆண் போலிஸ் அதிகாரி அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
காவலில் அடைக்கப்பட்ட பெண்ணுக்கு கடந்த 18ஆம் தேதி ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. பின்னர் இந்த கொடூர சம்பவம் குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். இந்த விவகாரம் பெரும் பூதாகரம் ஆனதையடுத்து பரத்பூர் காவல் நிலைய ஆணையர் தினக்ருஷ்ண மிஸ்ரா, சப்- - இன்ஸ்பெக்டர் பைசாலினி பாண்டா, உதவி சப்- - இன்ஸ்பெக்டர்கள் சலிலாமயி சாஹூ, சாகரிகா ராத் மற்றும் கான்ஸ்டபிள் பலராம் ஹண்டா ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து ஒடிசா காவல் துறை உத்தரவிட்டது. மேலும் 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக மாநில மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கியது. இச்சம்பவத்திற்கு எதிர்க்கட்சிகள் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகிறது.