For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“ஆம்ஸ்ட்ராங் அரசியல் அல்லது சாதிய காரணங்களுக்காக கொலை செய்யப்படவில்லை” - காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் பேட்டி!

03:28 PM Jul 06, 2024 IST | Web Editor
“ஆம்ஸ்ட்ராங் அரசியல் அல்லது சாதிய காரணங்களுக்காக கொலை செய்யப்படவில்லை”   காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் பேட்டி
Advertisement

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் சாதிய ரீதியான அல்லது அரசியல் காரணங்களுக்காக கொலை செய்யப்படவில்லை என சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார்.

Advertisement

சென்னை பெரம்பூர் பகுதியில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், அவர் வீட்டருகே மர்ம கும்பலால் அரிவாளால் வெட்டி தாக்கி கொலை செய்யப்பட்டார். இதனால், சம்பவ இடத்திலேயே ஆம்ஸ்ட்ராங் நிலை குலைந்து கீழே விழுந்துள்ளார். பின்னர், அந்த கும்பலானது நிகழ்விடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளனர். ஆம்ஸ்ட்ராங் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி ஆம்ஸ்ட்ராங் உயிரிழந்துள்ளார்.

இந்நிகழ்வு குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், உடனடியாக நிகழ்விடத்திற்கு வந்து விசாரணையில் ஈடுபட்டனர். கொலையாளிகளை பிடிக்க 5 தனி பிரிவு அமைக்கப்பட்டு காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் சில மாதங்களுக்கு முன்பு ஆற்காடு சுரேஷ்
என்பவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஆம்ஸ்ட்ராங் பின்னிருந்து செயல்பட்டார் என்றும் எனவே அவரது சகோதரர் கூலிப்படையை ஏவி இவரை கொலை செய்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகப்பட்டு விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையில், சம்பவத்தில் தொடர்புடைய ஆற்காட்டு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உள்ளிட்ட 8 பேர், சென்னை அண்ணா நகர் காவல் நிலையத்தில் சரணடைந்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில், சென்னை வேப்பேரி, காவல் ஆணையர் அலுவலத்தில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் இன்று (06.07.2024) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, “ஆம்ஸ்ட்ராங்கை அடையாளம் தெரியாத நபர்கள் கத்தியால் தாக்கினர்.  இதுகுறித்து செம்பியம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 8 நபர்கள் கைது செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆம்ஸ்ட்ராங் உடன் இருந்த 2 நபர்களுக்கு மேல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சாலை மறியல் நடைபெறும் இடங்களில் பல்வேறு இடங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்ட நபர்களுக்கு தக்க தண்டனை வழங்குவதற்கான நடைமுறைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அரசியல் காரணமாக அவர் கொலை செய்யப்படவில்லை. ஆம்ஸ்ட்ராங் உடன் பல்வேறு நபர்களுக்கு பல்வேறு பிரச்னைகள் உள்ளது. அதன் காரணமாக அவரை கொலை செய்திருக்கலாம்.

அரசியல் காரணமாக அவர் கொலை செய்யப்படுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. சரியான விசாரணைக்கு பிறகு தான் என்ன நடந்தது, அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது உறுதி செய்யப்படும். கைது செய்யப்பட்ட 8 இளைஞர்களிடம் விசாரணை நடைபெறுகிறது. பிறகு தான் எதுவும் சொல்ல முடியும். கைது செய்யப்பட்டவர்கள் மீது 5 முதல் 6 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

அருண் என்பவர் மீது மட்டும் எந்த வழக்குகளும் பதிவாகவில்லை. ஆம்ஸ்ட்ராங் மாநில தலைவராக இருக்கக்கூடிய நிலையில் அவர் எங்கு செல்கிறார் என்பது குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். ஆம்ஸ்ட்ராங் ஒரு கை துப்பாக்கியை அனுமதியோடு வைத்துள்ளார். இந்த வழக்கு மிக முக்கியத்துவமாக உள்ளதால் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கைது செய்யப்பட்ட நபர்கள்தான் கொலையை செய்ததாக தெரிவித்து வருகிறார்கள்.

சென்னையில் போக்குவரத்து சீராக உள்ளது. ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 300க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் இருந்து வருகிறார்கள். பேரணிக்கு இன்னும் கூடுதல் காவல் துறையினர் போட உள்ளோம். குளத்தூர், செம்பியம், பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கூடுதல் காவல் துறை பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படும். கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் யாரும் தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் இல்லை.

2021-ம் ஆண்டு 450 பேர் மீதும், 2022-ம் ஆண்டு 406 பேர் மீதும், 2023-ம் ஆண்டு 714 பேர் மீதும் குண்டாஸ் சட்டம் பாய்ந்துள்ளது. இந்த ஆண்டு 6 மாதத்தில் மட்டும் 769 பேர் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்துள்ளது. மதுபான கடைகள் மூடப்படுவது குறித்து பின்னர் அறிவிக்கப்படும். தற்போதைய விசாரணைப்படி ஆம்ஸ்ட்ராங்கின் கொலை சாதி ரீதியான கொலை இல்லை. இந்த வழக்கப் பொறுத்தவரையில் சரியான நடவடிக்கை எடுப்பதற்கு நேரம் தேவைப்படும்.

செம்பியம் பகுதியிலுள்ள பள்ளியில் ஆம்ஸ்ட்ராங் உடல் பொதுமக்கள் பார்வைக்காக வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட 8 நபர்களும் காவல் நிலையத்தில் வந்து ஆஜராகவில்லை. காவல் துறையினரால் கைது செய்யப்பட்டவர்கள் தான். சென்னை பெருநகர காவல் துறையினர் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட 3 மணி நேரத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்” இவ்வாறு சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement