ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - சி.பி.ஐ விசாரணைக்கு எதிராக தமிழ்நாடு அரசு புதிய மனு
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 2024 ஜூலை மாதம் 5ம் தேதி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த நாகேந்திரன் சமீபத்தில் உடல் நல பாதிப்பால் மரணம் அடைந்தார்.
இந்த சூழலில், இந்த வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக் கோரி ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் விசாரணையை சி.பி.ஐக்கு மாற்றி உத்தரவிட்டது.
ஆனால் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவினை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், சிபிஐ விசாரணையை தொடர்ந்து நடத்தலாம் எனவும் அதே வேளையில் குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய வேண்டும் என்ற உத்தரவுக்கு தடை விதித்தும் கடந்த அக்டோபர் 10ம் தேதி இடைக்கால உத்தரவு பிறப்பித்து இருந்தது.
இந்நிலையில் ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை தொடரும் என்ற உத்தரவை திரும்ப பெறக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.