ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - பிரபல ரவுடி சம்போ செந்திலுக்கு போலீசார் வலைவீச்சு!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பிரபல ரவுடி சம்போ செந்திலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ஆம் தேதி சென்னை பெரம்பூரில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 11 நபர்களை கைது செய்து, செம்பியம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே, கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான திருவேங்கடம் என்பவரை ஆயுதங்களை பறிமுதல் செய்ய அழைத்துச் சென்ற போது, காவல்துறையினரை துப்பாக்கியால் சுட முயன்றதாக கூறி போலீசார் என்கவுண்டர் செய்தனர்.
இதையடுத்து போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட 10 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி, அவர்களை மீண்டும் பூந்தமல்லி கிளை சிறையில் போலீசார் அடைத்தனர். இதனிடையே இந்த கொலை விவகாரத்தில் கொலையாளிகளுக்கு ரூபாய் ஒரு கோடி வரை கைமாறியதாக பரபரப்பு தகவல்கள் வெளியானது. அதன் தொடர்ச்சியாக நேற்று திமுக நிர்வாகி மகன் சதீஷ், அதிமுகவைச் சேர்ந்த மலர்க்கொடி, தமாகாவைச் சேர்ந்த ஹரிஹரன் ஆகிய மூன்று வழக்கறிஞர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்கள் இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அரசியல் வட்டாரங்களிலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் பல ரவுடிகள் இந்த கொலையின் பின்னணியில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் நேற்று கைது செய்யப்பட்ட ஹரிஹரன் கொடுத்த தகவலின் பேரில் பிரபல ரவுடி சம்போ செந்திலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதற்கிடையே, கைது செய்யப்பட்டுள்ள அதிமுகவை சேர்ந்த வழக்கறிஞர் மலர்க்கொடியும், தமாகாவை சேர்ந்த வழக்கறிஞர் ஹரிஹரன் ஆகியோர் அந்தந்த கட்சிகளில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.