பீகாரில் இரண்டு கட்டங்களாக தேர்தல் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு
பிகாரில் உள்ள 243 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வருகின்ற நவ. 22 ஆம் தேதியுடன் பதவிக் காலம் நிறைவடைகிறது. இதனை தொடர்ந்து பீகாரில் நவம்பர் 6 மற்றும் 11 ஆம் தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கபட்டுள்ளது.
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பீகார் சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்தார். டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர்,
”பீகாரின் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் மூலம் சரி செய்யப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிப்பு தொடர்பாக அனைத்து தரப்பிலும் தீவிர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. பீகாரில் மொத்தம் 7.43 கோடி வாக்காளர்கள் உள்ளனர் அதில் 3.92 கோடி ஆண் வாக்காளர்களும், 3.50 கோடி பெண் வாக்காளர்களும், 1,725 திருநங்கைகளும் உள்ளனர். பீகாரில் மொத்தம் 90,712 வாக்குச்சாவடி நிலையங்கள் உள்ளன. அதில் உள்ள ஒவ்வொரு பூத்திலும் சராசரியாக 818 வாக்காளர்கள் வாக்களிக்கலாம். வாக்குப்பதிவு 100% இணையவழியிலான ஒளிபரப்பு மூலம் கண்காணிக்கப்படும். வாக்குச்சாவடி மையங்களுக்கு வெளியே மொபைல் போன்கள் வைக்க சிறப்பு வசதி ஏற்படுத்தப்படும். பீகார் தேர்தல் குறித்து சமூக ஊடகங்கள் மற்றும் பிற தளங்களில் பரவும் போலி செய்திகளை கடுமையான நடவடிக்கைகள் மூலம் எடுக்கப்படும். முதன்முறையாக வேட்பாளர்களின் வண்ணப் புகைப்படங்கள் EVM-களில் இடம்பெற உள்ளன” என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், “பீகாரில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறும். முதல் கட்டத் தேர்தலுக்கு நவம்பர் 10 ஆம் தேதியும், இரண்டாம் கட்டத் தேர்தலுக்கு நவம்பர் 13 ஆம் தேதியும் வேட்புமனுத் தாக்கல் தொடங்குகிறது. முறையே, நவம்பர் 17, 20 வேட்புமனுத் தாக்கலுக்கு கடைசி நாளாகும். முதல்கட்டம் நவம்பர் 06 அன்று 121 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டமாக நவம்பர் 11அன்று 122 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறும். மேலும் வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14ல் நடைபெறும்” என்று அறிவித்துள்ளார்.