ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - குற்றவாளிகளின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை!
பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்தாண்டு ஜீலையில் அவரின் வீட்டருகே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக நாகேந்திரன், அஸ்வத்தாமன், அருள், பொன்னை பாலு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
மேலும் இக்கொலை சம்பவத்தில் தொடர்புடைய திருவேங்கடம் என்பவரை போலீசார் என்கவுண்டர் செய்தனர். இதையடுத்து இவ்வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் 5 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மீது நீதிமன்ற விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனிடையே கோடிக்கணக்கான பணம் குற்றவாளிகளின் வங்கிக் கணக்கிற்கும், அவர்களது உறவினர்களுக்கும் பரிமாற்றம் செய்யப்பட்டிருந்தது போலீசாரால் கண்டறியப்பட்டது. இந்த நிலையில் இவ்வழக்கில் தொடர்புடைய கொலையாளிகள் வீட்டில் காவல்துறையினர் இன்று(ஜன.13) காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக நாகேந்திரன் மற்றும் அவரது மகனான அஸ்வத்தாமன் வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
ஏற்கெனவே இவ்வழக்கு தொடர்பாக நடத்தப்பட்ட சோதனையில் 53 பட்டாக் கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டிருந்த நிலையில், இன்றும் சோதனை நடந்துள்ளது. சோதனை நிறைவடைந்த பிறகு முழு விவரங்களும் தெரிவிக்கப்படும் என போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.