பொங்கல் தொகுப்பு கரும்பு வழங்க தற்போது வரை அழைப்பு இல்லை - விவசாயிகள் கவலை!
அரசு நிர்ணயம் செய்த தொகையை விவசாயிகளுக்கு முழுமையாக வழங்க வேண்டும் என
விவசாயிகள் கோரிக்கை அளித்துள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் ஆண்டிமடம், தா.பழூர், திருமானூர் உள்ளிட்ட ஒன்றியங்களில் பல்வேறு கிராமங்களில், விவசாயிகள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விற்பனை செய்வதற்காக செங்கரும்பு சாகுபடி செய்துள்ளனர். பொங்கல் பண்டிகை வருவதற்கு இன்னும் 20 நாட்கள் உள்ள நிலையில் நன்கு விளைந்த செங்கரும்புகள் தெரு வியாபாரிகள் மூலம் விற்பனைக்கு வந்துள்ளது. தமிழ்நாடு அரசு சார்பில் செங்கரும்பை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்ய எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என விவசாயிகள் குற்றச்சாட்டு.
மேலும் சென்ற ஆண்டு போல் இல்லாமல், இந்த ஆண்டு உரிய கரும்பு சாகுபடி செய்துள்ள விவசாயிகளின் ஆவணங்களை பெற்று அவர்களுக்கு தொகை வழங்க வேண்டும்.
கமிஷன் தொகைக்காக சென்ற ஆண்டு கரும்பு சாகுபடி செய்யாத விவசாயிகளின் ஆவணங்களை வைத்து கரும்பு தொகை வழங்கப்பட்டது. இதனால் கரும்பு சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுபோல் விவசாயிகளுக்கு அரசு அறிவிக்கும் முழு தொகையையும் கிடைக்கப்பெறுவது இல்லை. இதில் பாதி தொகை கமிஷனாக விவசாயிகளிடம் இருந்து பெறப்படுகிறது.
கமிஷன் தராத பட்சத்தில் அந்த பகுதியில் உள்ள விவாசயிகளிடம் இருந்து கரும்பை கொள்முதல் செய்யாமல் வேறு பகுதிகளில் இருந்து கொள்முதல் செய்கின்றனர். இதனால் அதிகாரிகள் சரியான முறையில் ஆய்வு செய்து அந்தந்த பகுதிகளில் விளைவிக்கப்பட்டுள்ள விவசாயிகள் கரும்பை கொள்முதல் செய்யவும், விவசாயிகளுக்கு உரிய தொகை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என செங்கரும்பு சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.