”முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் போலி வாக்காளர்களா..? - பாஜக எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடந்த 7 ஆம் தேதி டெல்லியில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தினார். அதில்,தேர்தல் ஆணையம் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். மேலும் அவர், கடந்த மக்களவைத் தோ்தலில் ஆளும் பாஜக அரசு தோ்தல் ஆணையத்தின் உதவியுடன் போலி வாக்காளர்களை கொண்டு ‘வாக்குத் திருட்டில்’ ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டினர். அத்துடன் கர்நாடக வாக்காளர் பட்டியலில் முறைகேடு தொடர்பாக சில‘ஆதாரங்களையும்’ அவர், வெளியிட்டாா். இதனை தொடர்ந்து எதிர்க்கட்சிகள் போலி வாக்காளர்கள் விவகாரத்தை எழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில் டெல்லியில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைமை அலுவலகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் அனுராக் சிங் தாகூர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் இந்தியா கூட்டணியின் பல்வேறு தலைவர்கள் போட்டியிட்ட தொகுதிகளில் நடைபெற்ற வாக்காளர் முறைகேடுகள் குறித்து கேள்வி எழுப்பினார். முக்கியமாக தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தொகுதியான கொளத்தூரில் போலி வாகாளர்கள் இருந்ததாகவும் குற்றம் சாட்டினார்.
அவர் பேசியது , ”தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கொளத்தூர் தொகுதியில் 19,476 வாக்குகள் சந்தேகத்திற்கு இடமானவை என தெரிவித்தார். அதில் 9,133 வாக்குகள் போலி வாக்குகள் ஆகும் என கூறியதோடு, ஒரே வீட்டில் ஒலி முகவரியில் 30 வாக்காளர்கள் கண்டறியபட்டுள்ளனர். அதில், ஒருவருக்கு 3 வாக்காளர்கள் அட்டைகள் உள்ளது”
மேலும் வாக்காளர் ஒருவர் ஒரே வாக்குச்சாவடியில் மூன்று முறை வாக்களித்துள்ளார். இது தவறுதலாக நடந்ததா? அல்லது திட்டமிடப்பட்டு உள்நோக்கத்துடன் நடத்தப்பட்டதா? எனக் கேள்வி எழுப்பினார்.
மேலும் அவர், “போலி வாக்காளர்களை காப்பதற்காகவே மு.க.ஸ்டாலின் , ராகுல்காந்தி , சோனியாகாந்தி , அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் இந்திய தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை எதிர்க்கிறார்கள்” என குற்றம் சாட்டினார்.
கொளத்தூர் தொகுதியானது, தொகுதி மறு சீரமைப்பின் கீழ் 2011-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அதே ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதி போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து மு.க.ஸ்டாலின் 2016 மற்றும் 2021 ஆகிய தேர்தல்களிலும் கொளத்தூர் தொகுதியிலேயே வென்று சட்டமன்ற உறுப்பினாரானார். கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் முக ஸ்டாலின் 1,04,462 வாக்குகள் பெற்று அதிமுக வேட்பாளரை 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த நிலையில் பாஜக எம்.பி.யின் குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.