தன்னிச்சையாக விளக்க கடிதம்: #NTK மாநில நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்!
நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்பாக, திருச்சி எஸ்.பி.க்கு தன்னிச்சையாக விளக்கக் கடிதம் கொடுத்ததாக வழக்கறிஞர் பாசறை மாநிலச் செயலாளர் சேவியர் ஃபெலிக்ஸ் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2 வாரங்களாக திருச்சி எஸ்.பி.வருண் குமாருக்கும், நாதக-வினருக்கும் இடையே சமூக வலைதளங்களில் வார்த்தைப் போர் நீடித்து வருகிறது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து அவதூறு பரப்பியதாக நாதகவை சேர்ந்த சாட்டை துரைமுருகன் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். இதற்கு திருச்சி எஸ்.பி.வருண்குமார் தான் காரணம் எனவும், அவருக்கு சாதிரீதியான வெறுப்பு இருக்கிறது எனவும் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் பெயர் குறிப்பிடாமல் மறைமுகமாக விமர்சனம் செய்தார்.
இதனால் வருண்குமார், தனது வழக்கறிஞர் மூலமாக சீமானுக்கு கிரிமினல் அவதூறு நோட்டீஸ் அனுப்பினார். அந்த நோட்டீஸில், தனக்கு எதிராக அவதூறு பரப்பியதற்காக 7 நாட்களுக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும், ரூ.2 கோடி நஷ்ட ஈடாக தர வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இதற்கு 16 பக்கங்கள் கொண்ட பதில் கடிதத்தை சீமான் தனது வழக்கறிஞர் மூலமாக சமர்ப்பித்துள்ளார்.
ஆனால் மீண்டும் வருண்குமார் தரப்பில், தன்னை பற்றி அவதூறாக பேசியதற்கு விளக்கம் கேட்டு சீமானுக்கு நோட்டீஸ் அனுப்பினார். இதற்கு வழக்கறிஞர் பாசறை மாநில செயலாளர் சேவியர் ஃபெலிக்ஸ் தன்னிச்சையாக விளக்க கடிதம் கொடுத்துள்ளார். இந்நிலையில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக சேவியர் ஃபெலிக்ஸ் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல், சேவியரின் கருத்துக்கும், கட்சிக்கும் இனி எந்த தொடர்பும் இல்லை எனவும் சீமான் தெரிவித்துள்ளார்.