ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை: குற்றவாளி கைது, 15 மணி நேர விசாரணை!
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தாலுகா, ஆரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுமி, கடந்த ஜூலை 12ஆம் தேதி பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, ஒரு வடமாநில வாலிபரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
இந்தச் சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பல்வேறு அரசியல் கட்சிகளும் சமூக ஆர்வலர்களும் இச்சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்து, குற்றவாளியைக் கைது செய்ய வலியுறுத்தி ஆரணி காவல் நிலையம் முன்பு தொடர் போராட்டங்களை நடத்தினர்.
குற்றவாளியைப் பிடிக்க 20க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டன. 14 நாட்கள் நடைபெற்ற தீவிர தேடுதல் வேட்டையில், குற்றவாளியின் புகைப்படம் மற்றும் வீடியோ ஆதாரங்கள் பொது இடங்களில் ஒட்டப்பட்டன. குற்றவாளி குறித்த தகவல் அளிப்பவர்களுக்கு ரூ. 5 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என்றும் காவல்துறை அறிவித்தது.
அதன்படி நேற்று மாலை, இச்சம்பவத்தில் தொடர்புடைய மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ஒரு வாலிபரை போலீசார் ஆந்திர மாநிலம் சூலூர்பேட்டை ரயில் நிலையம் அருகே கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபரின் பெயர் விவரங்களை போலீசார் உடனடியாக வெளியிடவில்லை.
சூலூர்பேட்டையில் உள்ள ஒரு விடுதியில் வேலை செய்து வந்த அந்த நபர், கஞ்சா போதைக்கு அடிமையானவர் என்பதும், அடிக்கடி விடுமுறை எடுத்து வந்ததும் தெரியவந்துள்ளது. வாரந்தோறும் சனிக்கிழமை விடுமுறை எடுத்து தமிழக எல்லைப் பகுதிகளுக்கு, குறிப்பாகக் கிராமங்களுக்கு சுற்றுலா போல வருவது இவரின் வழக்கம். அதன்படி, சம்பவம் நடைபெற்ற சனிக்கிழமையன்றும் அவர் கும்மிடிப்பூண்டிக்கு வந்தது உறுதி செய்யப்பட்டது.
பாதிக்கப்பட்ட சிறுமியிடம் அந்த வாலிபரின் புகைப்படம் காண்பிக்கப்பட்டபோது, அவன்தான் குற்றவாளி என சிறுமி உறுதிப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, குற்றவாளி ஆரணி ரயில் நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டான்.
ஆரணி பகுதியில் வைத்து விசாரித்தால் சட்டம்-ஒழுங்குப் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதால், கவரப்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து போலீசார் சுமார் 15 மணி நேரத்திற்கும் மேலாகத் தீவிர விசாரணை நடத்தினர். கைது செய்யப்பட்ட வாலிபரை இன்று மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.