மதுரையில் டைடல் பார்க் அமைப்பதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல்!
நீர்நிலைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நல சங்கத்தின் தலைவர் மயில்சாமி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு வழக்கு தொடர்ந்தார்
அதில், மதுரை மாநகராட்சியின் 16வது வார்டு பகுதியில் உள்ள பகுதிகள் மறு வரையறை செய்வதற்கு முன்பாக வண்டியூர் குளம் மற்றும் நீர் பிடிப்புப் பகுதி என வகைப்படுத்தப்பட்டிருந்தது. பின்னர் அது அரசு புறம்போக்கு என வகைப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் மாட்டுத்தாவணி அருகில் 9.56 ஏக்கர் பரப்பளவில் உள்ள நிலத்தில் டைடல் பார்க் அமைக்க அரசு முடிவு செய்து, டைடல் பார்க்கை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் அந்த நிலம் வண்டியூர் குளம் என்றே வருவாய் ஆவணங்களில் உள்ளது. ஆகவே இந்த இடத்தில் டைடல் பார்க் கட்டிடத்தைக் கட்ட அனுமதிக்க கூடாது.
ஏனெனில் நீர்நிலைகளை ஆக்கிரமிப்பது பொது நலத்திற்கு எதிரானது, நீர்நிலைகளை ஆக்கிரமிக்க கூடாது என நீதிமன்றங்கள் உத்தரவிட்டும், அது தொடர்ச்சியாக மீறப்பட்டு வருகிறது.
எனவே மதுரை மாட்டுத்தாவணி அருகே அமைய உள்ள டைடல் பார்க் கட்டுமான பணிகளுக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தபோது,
தமிழ்நாடு அரசு தரப்பில், "வண்டியூர் குளம் இருந்த இடத்திலேயே தற்போது மாட்டுத்தாவணி பேருந்து நிலையமும் அமைந்துள்ளது. இந்தத் பகுதி 45 ஆண்டுகளுக்கு முன்பாக மறு வரையறை செய்யப்பட்டது எனக் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து ஆவணங்களை ஆய்வு செய்த உயர் நீதிமன்றம்,
மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான உரக்கிடங்கு இருந்த இடத்திலேயே தற்போது டைடல் பார்க் அமைக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இரண்டுமே பொதுமக்களின் நலனுக்காகனது எனக் தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தது.
அந்த உத்தரவை எதிர்த்து நீர் நிலைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நல சங்க தலைவர் மயில்சாமி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். அந்த மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.