அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விபத்து - உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு!
பாகிஸ்தான் நாட்டின் உள்ள லாகூர் மாகாணம் பாக்தாதி நகரில் 5 அடுக்குமாடிகளை கொண்ட குடியிருப்பு அமைந்துள்ளது. இதில் 40க்கும் மேற்பட்டோர் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்த அடுக்குமாடி குடியிருப்பு நேற்று அதிகாலை திடீரென இடிந்து விழுந்தது. இதில் கட்டிடத்தில் இருந்த பலரும் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். உடனடியாக இந்த சம்பவம் குறித்து மீட்புக்குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு படையினர் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, சிலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் இந்த விபத்தில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி 9 பெண்கள் உள்பட 27 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் மேலும் சிலர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாக தெரிகிறது. அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்து 27 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.