மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நிறைவு..!
மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை 13 மணி நேரத்திற்கு பின் நிறைவு பெற்றுள்ளது.
சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக திண்டுக்கல் மருத்துவரிடம் லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அங்கித் திவாரியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மதுரையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர்.
10-க்கும் மேற்பட்ட திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் அமலாக்கத்துறை துணை மண்டல அலுவலகத்தில் உள்ள அங்கித் திவாரி அறையில் சோதனை மேற்கொண்டனர். அலுவலகத்தைச் சுற்றி ஆயுதம் ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இதையும் படியுங்கள் : அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
இந்நிலையில், மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் 13 மணி நேரமாக நடைபெற்ற தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நிறைவு பெற்றது. இந்த சோதனையில், சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று மாலை 6 மணிக்கு தொடங்கிய சோதனை இன்று காலை 7 மணி வரை தொடர்ந்து நடைபெற்று நிறைவு பெற்றுள்ளது.