கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவ முக்கிய குற்றவாளிகள் இருவர்மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு!
கள்ளக்குறிச்சியில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 19ம் தேதியன்று கள்ளக்குறிச்சி பேருந்து நிலையம் எதிரே உள்ள உள்ள ஜும்மா பள்ளிவாசல் முன்பு அடையாளம் தெரியாத ஆண் சடலம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் நடைபெற்ற இரண்டு நாட்களில் ஜூன் 21ஆம் தேதி அன்று விஷ சாராயம் அருந்தி 200க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில், 68 நபர்கள் உயிரிழந்தனர். மெத்தனால் கலந்த சாராயம் பருகியே அனைவரும் உயிரிழந்ததாக போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வந்த நிலையில், 24 பேரை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கானது சிபிஐக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனிடையே ஜூன் மாதம் 19ஆம் தேதி அன்று உயிரிழந்த மர்ம நபர் யார் என்பது குறித்து விசாரணை மோற்கொள்ளப்பட்டது. விசாரணையில் உயிரிழந்தவர் கடலூர் மாவட்டம் பூலாம்பாடியை சேர்ந்த தங்கராசு என்பது தெரிய வந்தது. அவரின் பிரேத பரிசோதனை முடிவுகள் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு கள்ளக்குறிச்சி போலீசாருக்கு கிடைத்துள்ளது. இந்த பிரேத பரிசோதனை அறிக்கையின்படி, மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தை குடித்ததால் தங்கராசு உயிரிழந்தார் என்பது தெரியவந்தது.
தொடர் விசாரணையில் இவர் கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியைச் சேர்ந்த கண்ணுக்குட்டி என்கின்ற கோவிந்தராஜ் மற்றும் அவரது சகோதரரான தாமோதரன் ஆகியோர் விற்பனை செய்த கள்ளச்சாராயத்தை வாங்கி பருகி உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை கைது செய்து கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இருவரையும் மார்.4ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். ஏற்கனவே சிபிஐ வசம் இருக்கும் கள்ளச்சாராய வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக கருதக்கூடிய கண்ணுக்குட்டி என்கின்ற கோவிந்தராஜ் மற்றும் தாமோதரன் ஆகியோர் மீது, கள்ளக்குறிச்சி போலீசார் மீண்டும் ஒரு வழக்கு பதிவு செய்திருப்பது புதிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.