புதிய பாஜக மாநிலத் தலைவருக்கான அறிவிப்பு? - நாளை தமிழ்நாடு வரும் அமித்ஷா!
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா - அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு டெல்லியில் அண்மையில் நடைபெற்றது. இதையடுத்து அதிமுக - பாஜக கூட்டணி மற்றும் பாஜக மாநிலத் தலைவர் மாற்றம் பற்றிய தகவல்கள் தமிழ்நாடு அரசியலில் பேசுபொருளானது.
இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் நாளை(ஏப்ரல்.10) தமிழ்நாடு வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி நாளை சென்னை வரும் அவர் கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் நட்சத்திர விடுதியில் தங்குவார் என தகவல் வெளியாகி இருக்கிறது.
தொடர்ந்து நாளை மறுநாள்(ஏப்ரல்.11) காலை 10 மணி முதல் 4:00 மணி வரை பல்வேறு தரப்பினர்களை அமித்ஷா சந்தித்து பேசுவிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த பயணத்தில் புதிய பாஜக மாநிலத் தலைவர் யார் என்று அறிவிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் 2026 தேர்தலுக்கு பாஜக மேற்கொள்ளிருக்கும் தேர்தல் வியூகம் குறித்து ஆலோசனை நடத்தவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் அடுதாண்டு ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே எஞ்சியிருக்கும் நிலையில், தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. தமிழ்நாட்டில் திமுக தலைமையில் வலுவான கூட்டணி உள்ள நிலையில், அதிமுக - பாஜக மீண்டும் கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்புகள் தென்பட்டுள்ளன.