மீண்டும் ஒரு தமிழ்க் கனவு - இளைஞர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு!
"ஓராண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் மாபெரும் தமிழ்க் கனவு!" என்ற தலைப்புடன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் ஒரு புதிய பதிவை வெளியிட்டுள்ளார்.
மாபெரும் தமிழ்க் கனவின் மூன்றாம் கட்டம் ஆகஸ்ட் 6-ஆம் தேதி தொடங்குகிறது என்ற அறிவிப்பு, இளைஞர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிகழ்வின் முதன்மை நோக்கம், இளைய தலைமுறையினருக்கு நமது பாரம்பரியத்தையும், பெருமைகளையும் கடத்துவது என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதில், சமூகச் சமத்துவம், தமிழ் மரபு, தமிழர் தொன்மை, பண்பாட்டுச் செழுமை, மொழி முதன்மை, இலக்கிய வளமை, கலைப் பன்மை, பொருளாதார முன்னேற்றம் ஆகிய எட்டு முக்கிய அம்சங்கள் குறித்து மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
மேலும் இந்த மாபெரும் தமிழ் கனவின் மூன்றாம் கட்டத்தில், 50-க்கும் மேற்பட்ட பல்துறை ஆளுமைகள் பங்கேற்க உள்ளனர். இவர்களில் எழுத்தாளர்கள், சமூகச் செயல்பாட்டாளர்கள், அறிஞர்கள், கலைஞர்கள் மற்றும் பொருளாதார வல்லுநர்கள் அடங்குவர். இவர்கள், சுமார் 200 கல்லூரிகளில் படிக்கும் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுடன் நேரடியாக உரையாட உள்ளனர்.
முதலமைச்சர் ஸ்டாலினின் இந்த முயற்சி, நவீன உலகில் நமது பாரம்பரியத்தைப் பாதுகாப்பதோடு, அடுத்த தலைமுறையை அறிவுசார்ந்து, சமூகப் பொறுப்புடன் வளர்ப்பதற்கான ஒரு முக்கிய படியாகக் கருதப்படுகிறது. இந்தத் திட்டத்தின் மூலம், "அறிவை விரிவு செய்து அகண்டமாக்குவோம்! தமிழால் இணைவோம்! தமிழராய் உயர்வோம்!" என்ற முதலமைச்சரின் அழைப்பு இளைஞர்கள் மத்தியில் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.