#AnnapurnaHotel விவகாரம் : "யார் மனதையும் புண்படுத்த வேண்டாம்" - BJP தொண்டர்களுக்கு வானதி சீனிவாசன் வேண்டுகோள்!
அன்னபூர்ணா விவகாரத்தில் யார் மனதையும் புண்படுத்தாமல் இருக்க பாஜக தொண்டர்களுக்கு கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் வேண்டுகோள் வைத்துள்ளார்.
கோவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான ஜிஎஸ்டி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன், ஜிஎஸ்டி குறித்து சரமாரிக் கேள்விகளை எழுப்பினார். இது பெரும் விவாதத்தை உண்டாக்கியது. அவர் கேள்வி கேட்பது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் மன்னிப்பு கோரினார். நிதியமைச்சரிடம் நேரில் மன்னிப்பு கேட்ட வீடியோ ஒன்று வைரலானது. அதில் அவர் தான் எந்த கட்சியையும் சேர்ந்தவன் இல்லை, மன்னித்துக் கொள்ளுங்கள் என பேசியிருந்தார்.
இந்த வீடியோ வைரலாகி பெரும் சர்ச்சையை உண்டாக்கியது. இதையடுத்து வணிகர்களுக்கு மிஞ்சியது அவமானம் மட்டுமே என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் பாஜக தொண்டர்களுக்கு கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் முக்கிய வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார்.இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் தெரிவித்துள்ளதாவது :
"வழக்கம் போல தங்கள் மடைமாற்றும் அரசியலை துவக்கியுள்ள திமுகவினருக்கு கண்டனம்.கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற தொழில் அமைப்பு நிர்வாகிகளுடனான கலந்துரையாடலில், தான் நட்புரீதியாக கூறிய கருத்துக்களை I.N.D.I.A. கூட்டணிக் கட்சிகள் தங்கள் அரசியல் லாபத்திற்காக பொய்யாக திரித்துக் கூறி விளம்பரப்படுத்துவதை நினைத்து வருந்திய, அன்னபூர்ணா உணவகத்தின் நிறுவனர் ஸ்ரீனிவாசன், தாமாக முன்வந்து தான் அப்படிப் பேசியிருக்க கூடாது என்று கூறியதை, வழக்கம்போல் திரித்துப் பேசி அரசியல் செய்ய முயற்சித்திருக்கிறார்கள்.
மேலும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும், GST பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்கிறேன். ஆனால், பொது வாழ்க்கையில் உள்ள ஒரு பெண்மணியின் உணவுப் பழக்கத்தை இப்படி பொதுவெளியில் பேசு பொருளாக்கலாமா?” என்று தனது வருத்தத்தைத் தான் அவரிடம் வெளிப்படுத்தியுள்ளார். இதில் யாரும் தனது அதிகாரத்தையோ அரசியல் பொறுப்பையோ முன்னிறுத்தி எதுவும் பேசவில்லை. ஆனால், பரம்பரை பரம்பரையாக பொய் பிரச்சாரத்தின் மூலம் வெறுப்பரசியல் செய்யும் I.N.D.I.A கூட்டணிக் கட்சிகள், இந்த விவகாரத்தை தங்கள் இஷ்டம் போல திரித்து பொய் அவதூறுகளைப் பரப்ப முயற்சிப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
இந்த விவகாரத்தில் மாநிலத் தலைவர் அண்ணாமலையும் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதனால் இந்த விவகாரத்தை மேற்கொண்டு தொடராமலும், யார் மனதையும் புண்படுத்தாமலும் இருக்க பாஜக தொண்டர்களை கேட்டுக் கொள்கிறேன்"
இவ்வாறு அவர் தெரிவித்தார்.