“அண்ணாமலையின் செயல் தேவையற்றது” - சீமான்!
“அண்ணாமலை சாட்டையில் அடித்துக்கொண்டு தன்னைத்தானே வருத்திக் கொள்வது தேவையற்றது. தவறு செய்பவர்களையும், அதற்கு காரணமானவர்களையும் தான் சாட்டையால் அடிக்க வேண்டும்” என சீமான் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;
“பாமகவின் உள்கட்சி மோதலில் கருத்து சொல்ல முடியாது. இரண்டு பேரும் என் மதிப்பிற்குரியவர்கள். இது ஒரு சிறிய பிரச்னை. அது சரியாகிவிடும். நம்பகத்தன்மைக்காகவே அன்புமணியை தலைவராக நிறுத்த வேண்டிய சூழல் உருவானது. நாம் தமிழர் கட்சியில் தலைவர் உருவாகுவார். உருவான பின்பு பார்த்துக் கொள்ளலாம். நாங்கள் பார்க்கும் தலைவன் வேறு. படம் எடுத்தால் தலைவர் என்று பெயர் போட்டுக் கொள்ளலாம். ஆனால் தலைவருக்கு பல தகுதி உள்ளது. 140க்கும் மேற்பட்ட வழக்குகள் என் மேல் உள்ளது. என் கால் படாத நீதிமன்றங்கள் இல்லை.
மக்களுக்கான அரசியல் என்பது இங்கு கிடையாது. கட்சி அரசியல், தேர்தல் அரசியல்தான் இங்கு உள்ளது. திமுக செய்வது மக்கள் அரசியலா? கோயில், மதம், சாமியை தவிர வேறு எதையாவது பாஜக பேசியுள்ளதா? அனைத்து அமைச்சர்களும் மருத்துவமனை, பள்ளிகளை வைத்திருக்கிறார்கள். எப்படி அரசு மருத்துவமனைகள், பள்ளிகளின் தரம் உயரும்?. 5 வருடம் கழித்துதான் மக்களிடம் கள ஆய்வு என வருவார்கள். என்ன பிரச்சனை கேட்பார்கள்.
ஊதியம் கொடுக்க, நிவாரண நிதி கொடுக்க காசு இருக்காது. மாதம் மாதம் ரூ.1000 கொடுக்க காசு இருக்கும். கமிஷன் வாங்கும் புறக்கணிகளை தேர்வு செய்து கொண்டு, தலைவர்களை எங்கே தேடுவது? அரசியல்வாதிகள் அடுத்த தேர்தலை குறித்து கவலைப்படுவார்கள். அண்ணாமலையின் கோபத்தை குறைத்து மதிப்பிடக்கூடாது. எனக்கும் அத்தகைய கோபம் இருக்கிறது. அதற்காக சாட்டையில் அடித்துக்கொண்டு தன்னைத்தானே வருத்திக் கொள்வது தேவையற்றது. தவறு செய்பவர்களையும், அதற்கு காரணமானவர்களையும் தான் சாட்டையால் அடிக்க வேண்டும்.
அவரது உணர்வை அவ்வாறு வெளிக்காட்டியுள்ளார். அதனை விமர்சிக்கக்கூடாது. வாக்குக்கு ஏன் ரூ.500, ரூ.1000 கொடுக்க வேண்டும்? யார் ஒருவர் வாக்காளருக்கு பணம் கொடுக்கிறாரோ, அவர் 10 ஆண்டுகள் தேர்தலில் நிற்க தடை என்ற சட்டத்தை போட்டால் ஒருவரும் தேர்தலுக்கு பணம் தரமாட்டார்கள். செருப்பில்லாமல் இல்லை, காலில்லாமல் நடந்தால் கூட இதையெல்லாம் சரிசெய்தால் தான் ஒழிக்க முடியும். இலவசம் என்பது வளர்ச்சிக்கான திட்டம் இல்லை, வீழ்ச்சிக்கான திட்டம் என உலகத்திற்கே தெரியும்.
தூறல் பயிருக்கு உதவாது. அதுபோல, இலவசங்கள் நாட்டுக்கு உதவாது என குன்றக்குடி அடிகளார் சொன்னது போல, இலவசங்கள் கொடுப்பதும் நாட்டுக்கு கேடு. இவை இரண்டையும் கணக்கில் கொள்ளாமல் திமுக அரசை தோற்கடிக்க முடியாது.
ஆசிரியர்கள், விவசாயிகள், மாணவர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள் என அனைவரும் சாலையில் போராடி வருகின்றனர். இதற்கு பெயர் நல்லாட்சியா? சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் நாயுடு என யாராவது ஒருவர் வெளியே வந்தால், மு.க.ஸ்டாலின் உள்ளே செல்வார். எவ்வளவோ எஃப்ஐஆர்கள் போடப்படுகின்றன. அண்ணா பல்கலை மாணவியின் எஃப்ஐஏர் மட்டும் எப்படி கசிந்தது? இது பெரும் வன்கொடுமையாக உள்ளது. நீதிமன்றத்தின் கேள்விக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும். கை, காலை உடைப்பதுதான் தண்டனையா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.