நான் சிறையில் இருந்து வெளியே வர அண்ணாமலையே காரணம்..! - அமர் பிரசாத் ரெட்டி பேட்டி
நான் சிறையில் இருந்து வெளியே வர பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தான் மிகப்பெரிய காரணம் என்று அக்கட்சி நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி தெரிவித்துள்ளார்.
சென்னை ஈசிஆரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வீட்டின் முன்பு அனுமதியின்றி வைக்கப்பட்ட பாஜக கொடிக் கம்பத்தை அகற்றுவதற்காக சென்ற ஜேசிபி வாகனத்தை சேதப்படுத்திய வழக்கில், பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து ஜாமீன் கோரி அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட ஆறு பேரும் தாக்கல் செய்த மனு, சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, நிபந்தனையுடன் அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 6 பேருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
இந்நிலையில், சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக அலுவலகத்திற்கு அமர் பிரசாத் ரெட்டி இன்று வருகை தந்தார். அப்போது பாஜக தொண்டர்கள் பட்டாசு வெடித்து, மாலை அணிவித்து, ஆரத்தி எடுத்து அவரை வரவேற்றனர். இதையடுத்து செய்தியாளர்களுக்கு அமர் பிரசாத் ரெட்டி பேட்டியளித்தார்.
இதையும் படியுங்கள் : ‘சிக்கன்’ மீது இம்புட்டு ஆசையா... - கோமாவில் இருந்து எழுந்த தைவான் இளைஞர்..!
அப்போது பேசிய அவர், “என்னை சிறையில் இருந்து வெளியே கொண்டு வர பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தான் மிகப்பெரிய காரணம். நான் சிறையில் பிளாக் 3-ல் இருந்தேன். என்னுடன் கஞ்சா வழக்கில் கைதான கைதிகள், கொலை குற்றவாளிகள் இருந்தனர். வழக்கறிஞர்களை கூட பார்க்க எனக்கு அனுமதி வழங்கவில்லை. இதனை நான் நீதிமன்றத்திலும் கூறினேன்.
நான் என் கட்சிக்காக, என் கொடிக்காக சிறை சென்றது பெருமையாக உள்ளது. 2026-ல் தமிழ்நாட்டில் நாங்கள் ஆட்சி அமைத்தே தீருவோம். குள்ளநரிகள் கூட்டத்தை கண்டு இந்த சிங்க கூட்டம் அஞ்சாது. உயிர் இருக்கும் வரை நான் பாஜகவில் தான் இருப்பேன். சிறையில் இருக்கும் ஆளுங்கட்சி ஆதரவாளர்களுக்கு பல வசதிகள் உள்ளன. சிறையில் கஞ்சா புழக்கம் உள்ளது” என்று தெரிவித்தார்.