புயல் எச்சரிக்கை காரணமாக பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு!
புயல் எச்சரிக்கை காரணமாக டிச.3 மற்றும் 4-ம் தேதிகளில் நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சென்னை பல்கலை. மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை தென்மேற்கு வங்கக் கடலில் புயலாக மாற வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. மிக்ஜாம் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த புயலானது வடக்கு நோக்கி நகர்ந்து தெற்கு ஆந்திரப் கடற்கரையை அடைந்து டிச. 5-ம் தேதி முன் மதியம் நெல்லூர் மற்றும் மச்சிலிப்பட்டினம் இடையே புயல் கரையை கடக்கும். அப்போது காற்றின் வேகம் 80-90 கிமீ வேகத்திலும் இடையே 100 கிமீ வேகத்திலும் காற்று வீசக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
மிக்ஜாம் புயல் டிசம்பர் 5-ம் தேதி முற்பகலில் கரையை கடக்க கூடும் எனவும், இதையொட்டி அடுத்து வரும் 3 நாட்களுக்கு (டிச. 3, 4, 5) வட தமிழக மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் தென்மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் டிச.3, 4ம் தேதிகளில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு வெளியிட்டனர். இந்த நிலையில், வரும் 4ம் தேதி திங்கட்கிழமை நடக்க இருந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அண்ணா பலகலைக்கழகம் அறிவித்துள்ளது. மாணவர்களின் பாதுகாப்பு கருத்தி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.