மதுரையில் பரபரப்பு | அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது மதுரை போலீஸார் வழக்குப்பதிவு!
மதுரை அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
லஞ்ச வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கடந்த 1 ஆம் தேதி கைது
செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கைதான போது மதுரையில் உள்ள
அமலாக்கத்துறை அலுவலகத்தில் திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார்
அதிரடியாக சோதனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அப்போது அமலாக்கத்துறை அதிகாரிகள் அலுவலகத்திற்குள் நுழைந்து சோதனை நடத்த
தடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் அங்கித் திவாரி அலுவலகத்திற்குள்
அவரது அறையை சோதனை நடத்தவும் எதிர்த்ததாக கூறப்பட்டது.
இதையும் படியுங்கள் : புதிய வகை கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தடுப்பூசி தேவையில்லை -மத்திய சுகாதாரத்துறை
இது தொடர்பாக திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மதுரை நகர தல்லாக்குளம்
காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். தங்களை பணி செய்யவிடாமல் அமலாக்கத்துறை
அதிகாரிகள் தடுத்ததாக புகார் அளித்தனர்.
இந்த புகார் தொடர்பாக தல்லாக்குளம் போலீசார் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது
வழக்குப்பதிவு செய்துள்ளனர். அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக
வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு தல்லாக்குளம் போலீசார் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்ப முடிவு செய்து உள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.