லஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்ட அங்கித் திவாரி - மதுரை மத்திய சிறைக்கு மாற்றம்!
லஞ்சம் பெற்ற புகாரில் கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி, திண்டுக்கல் மாவட்ட சிறையிலிருந்து மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.
திண்டுக்கல்லில் மருத்துவர் ஒருவரிடம் வழக்கை முடித்து தருவதாக கூறி, 20 லட்சம் லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை கையும் களவுமாக பிடித்து லஞ்ச ஒழிப்புப் போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அங்கித் திவாரியிடம் பல மணி நேரம் விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அவரை திண்டுக்கல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதனைத்தொடர்ந்து மதுரை தபால் தந்தி நகரில் உள்ள அமலாக்கத்துறை துணை மண்டல அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் 13 மணி நேரமாக சோதனை மேற்கொண்டனர். சோதனையின்போது 50க்கும் மேற்பட்ட இந்தோ-திபெத் போலீசாரும் நூற்றுக்கும் மேற்பட்ட மாநில காவல்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையின் முடிவில் பல்வேறு முக்கிய ஆவணங்களையும், வருகை பதிவேடுகளையும் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் கைப்பற்றினர். அத்துடன் கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரியின் வங்கிக் கணக்கு பண பரிவர்த்தனை, மெயில் மற்றும் வாட்ஸ் அப் தகவல்கள் மற்றும் அங்கித் திவாரி கையாண்ட வழக்குகளுக்கான ஆவணங்களையும் கைப்பற்றினர்.
இந்நிலையில் திண்டுக்கல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அங்கித் திவாரி, திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து இன்று அவர் மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். மேலும் அவர் கடந்த இரண்டு நாட்களாக உணவு ஏதும் அருந்தாமல் அழுது கொண்டே இருப்பதாகவும், மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாலும் மனநல ஆலோசகர், தற்கொலை தடுப்பு ஆலோசகர் உள்ளிட்டோர் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.