அங்கித் திவாரிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்!
லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை துணை சூப்பிரண்டு டாக்டர் சுரேஷ்பாபு. இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2018-ம் ஆண்டு திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கிலிருந்து தப்பிக்க வைக்க தனக்கு 3 கோடி லஞ்சம் வேண்டும் என மதுரை அமலாக்க துறையில் பணிபுரியும் துணை இயக்குநர் அங்கித் திவாரி மருத்துவர் சுரேஷ் பாபுவை அணுகி உள்ளார். 3 கோடிக்கு ஒத்துக் கொள்ளாத நிலையில், ரூ 51 லட்சம் கண்டிப்பான முறையில் தர வேண்டும் என அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி மிரட்டியுள்ளார்.
இதையும் படியுங்கள் : “எந்த இடத்தில் வாக்கு குறைந்தாலும் பொறுப்பாளர்கள் பதில் சொல்ல வேண்டும்” – மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!
இதனை தொடர்ந்து கடந்த நவம்பரில் 20 லட்சம் கொடுத்துள்ளார். தொடர்ந்து வாட்ஸ்
ஆப் மூலமாக அங்கித் திவாரி மீதியுள்ள 31 லட்சத்தை கேட்டு தொந்தரவு
செய்துள்ளார். இதனையடுத்து டாக்டர் சுரேஷ் பாபு திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலிஸில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் ரசாயன கலவைகள் தடவிய 500 ரூபாய் நோட்டு கட்டுகளை சுரேஷ் பாபுவிடம் கொடுத்துள்ளனர். அதனை சுரேஷ் பாபு அங்கித் திவாரியிடம் கொடுக்கும்போது லஞ்ச ஒழிப்புத் துறையினர் சுற்றி வளைத்தனர்.
அப்பொழுது தப்பிக்க முயன்ற அமலாக்கத்துறை அதிகாரியை லஞ்ச ஒழிப்பு துறை காரில்
விரட்டி பிடித்து கைது செய்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பின்னர் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி திண்டுக்கல் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் அங்கீத் திவாரி மனு தாக்கல் செய்திருந்தார். ஜாமீன் வழங்க மறுத்த திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்து.
இந்நிலையில் அங்கித் திவாரி தாக்கல் செய்த ஜாமீன் தொடர்பான சீராய்வு மனு இன்று விசாரணைக்கு வந்தது. இதையடுத்து அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டை விட்டு எங்கும் வெளியே செல்லக்கூடாது என்ற நிபந்தனையுடன் அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்கியுள்ளது.