ஆந்திரா, ஒடிசா சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் இன்று வெளியீடு - விளவங்கோடு இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளும் இன்று எண்ணப்படுகின்றன!
ஆந்திரா மற்றும் ஒடிசா மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிறது. அதேபோல விளவங்கோடு இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளும் இன்று எண்ணப்படுகின்றன
நாட்டில் 18-வது நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வாக்குப்பதிவு ஜூன் 1ம் நடைபெற்று முடிந்துள்ள தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற உள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
நடந்து முடிந்த தேர்தலில் 642 மில்லியன் வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். இது 27 ஐரோப்பிய நாடுகளின் வாக்காளர்களை விட 2.5 மடங்கு அதிகம் ஆகும் வாக்குப்பதிவிற்காக 135 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. 68,793 கண்காணிப்பு குழுக்கள் செயல்பட்டன. கிட்டத்தட்ட 1.5 கோடி தேர்தல் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் பணியில் ஈடுபட்டனர்.
இன்று காலை சரியாக 8மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படும். முதலாவதாக தபால் வாக்கு எண்ணப்படும். மக்களவைத் தேர்தலோடு ஆந்திரா. ஒடிசா போன்ற சட்டப் பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளும் எண்ணப்படும். அதேபோல தமிழ்நாட்டில் இடைத் தேர்தல் நடைபெற்ற விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்குகளும் இன்று எண்ணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆந்திராவில் உள்ள 175 தொகுதிகளில் ஆட்சியை பிடிக்க 88 இடங்கள் தேவைப்படுகிறது. அதேபோல ஒடிசா மாநிலத்தில் மொத்தம் உள்ள 147 தொகுதிகளில் ஆட்சியை பிடிக்க 74 இடங்கள் தேவைப்படுகிறது.